இந்திய ரிசர்வ் வங்கி
1935-ல் தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் மைய வங்கியாகும். 1949-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும்.
நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, பல பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவது போல் ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது.
இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் பொருளாதார கொள்கைகளை இயற்றி அதன் அபிவிருத்தி திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு நிறுவன அமைப்பாகும். இது பணவியல் கொள்கையை கட்டுப்படுத்துகிற ஒரு மைய வங்கி நிறுவனம்.
இது பணவியல் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவது, மற்றும் கண்காணிப்பது. விலை நிலைத்தன்மையை பராமரிப்பது மற்றும் உற்பத்தி துறைகளில் போதுமான கடன் ஓட்டத்தை உறுதி செய்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும். நாட்டின் வங்கி மற்றும் நிதி அமைப்பு செயல்பாடுகளை மேற்பார்வையிடுதலும் மற்றும் ஒழுங்குபடுத்துதலும் இதன் செயல்களாகும்.
நாட்டுக்கு தேவையான பணம் அச்சிட்டு வெளியிடுவது, அதன் போதிய இருப்பை மேலாண்மை செய்தலும் இந்திய ரிசர்வ் வங்கியின் மற்றுமொரு முக்கிய பொறுப்பாகும். அரசு உட்பட வேறு யாருக்கும் பணம் அச்சிடும் அதிகாரம் கிடையாது. வெளி வர்த்தகம் மற்றும் பணம் செலுத்தும் வசதி, நாட்டின் அந்நிய செலாவணி சந்தையினை மேலாண்மை செய்தலும் இதன் பணிகளாகும்.
இது, மத்திய, மாநில அரசாங்கங்களின் வணிக வங்கி பணிகளை செய்வதோடு அவர்களின் வங்கியாகவும் செயல்படுகிறது. அனைத்து திட்டமிடப்பட்டுள்ள வங்கிகளின் கணக்குகளையும் பராமரிக்கிறது. எனவே இது ‘அரசுகளுக்கும் வங்கிகளுக்குமான வங்கி‘ என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக நாட்டின் சிறந்த பொருளியல் அறிஞர்கள் இதன் தலைவர்களாக இருப்பார்கள். இதன் தலைவர்கள், நிர்வாக இயக்குனர்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்டாலும், இந்த வங்கி தன்னிச்சையாக இயங்கும் அதிகாரம் கொண்டது.
Related Tags :
Next Story