சுகாதாரமற்ற பள்ளிகள்... பாதிக்கப்படும் குழந்தைகள்
உலகின் பாதி பள்ளிக்கூடங்கள் சுகாதாரமற்று உள்ளதாகவும் இதனால் குழந்தைகள் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட பாதி பள்ளிக்கூடங்களில் தண்ணீர், கழிவறை, கை கழுவும் இடம் ஆகியவை சுத்தமாக இல்லை என்கிறது உலக சுகாதார மையத்தின் யுனிசெப் ஆய்வு. ‘‘இந்த அடிப்படை சுகாதார வசதிகூட இல்லாததால் பள்ளி செல்லும் சுமார் 90 கோடி குழந்தைகளின் உடல்நலம் கேள்விக்குறியாகி உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், தரமான கல்விச் சூழலை உருவாக்கமுடியாது’’ என்கிறார், இந்த ஆய்வை வழிநடத்திய உலக சுகாதார அமைப்பின் ரிக் ஜான்ஸ்டன்.
உலகில் சுமார் 20 சதவீத பள்ளிகளில் சுத்தமான தண்ணீர் இல்லை. மூன்றில் ஒரு பங்கு பள்ளிகள் சுகாதாரமற்ற கழிவறைகளைக் கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ள கை கழுவும் இடம், பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுத்தமாக இல்லை என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. சகாரா பாலைவனத்தின் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா, கிழக்காசியா, தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள பள்ளிகள் சுகாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
பெரும்பாலான குழந்தைகள், கல்வி கற்பதற்காக எச்சூழ்நிலையிலும் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆனால் சில குழந்தைகள், சுகாதாரமற்ற கழிவறைகளால் பள்ளிக்குச் செல்வதைக்கூட தவிர்க்க நேரிடலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு.
தரமான கல்வியை மட்டுமல்ல, சுகாதாரமான பள்ளிச் சூழலையும் உருவாக்க வேண்டியது உலக நாடுகளின் பொறுப்பு.
Related Tags :
Next Story