பூகம்பத்தை முன்கூட்டி அறிய முயற்சி!
ஒரு பூகம்பத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்களை எந்திர கற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிவதற்கு விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
பிரதான பூகம்பத்தைத் தொடர்ந்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்கள் வரையறையின்படி சிறியதாகக் கருதப்பட்டாலும், அவை சில சமயங்களில் பெரிய அளவிலான பாதிப்புகளை உண்டாக்குகின்றன.
இந்நிலையில், முதல்முறையாக எந்திர கற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பூகம்பத்தின் பிந்தைய நடுக்கம் எங்கு நடைபெறும் என்பதைக் கணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.
எந்திர கற்றலையும், அதை ஒட்டிய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதன் மூலம் பூகம்பம் குறித்த சிக்கலான விஷயங்களை அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
‘‘நீங்கள் பூகம்பம் பற்றிய முன்னறிவிப்பு குறித்து யோசித்துப் பார்த்தால், பூகம்பம் எப்போது நடக்கும், எந்த அளவுக்கு இருக்கும், எந்த இடத்தைத் தாக்கும் என்பது போன்ற விஷயங்கள் மனதில் எழலாம். நாங்கள் பிரதான பூகம்பத்தை தொடர்ந்த பிந்தைய நடுக்கங்கள் எங்கு நடைபெறும் என்பதைக் கண்டறிவதற்கு முயற்சி செய்கிறோம்’’ என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும், ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியருமான பிரெடன் மேட் கூறுகிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பூகம்பங்கள் மற்றும் பிந்தைய நடுக்கங்கள், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் திரட்டப்பட்டுள்ள தரவுகளையும் பதிவுகளையும் முதலாகக் கொண்டு, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படாத மற்ற பூகம்பங்களுடன் விஞ்ஞானிகள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
நரம்பியல் வலையமைப்புகள் என்றழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பம் மனித மூளையின் செயல்பாட்டை ஒத்தது. அதாவது, தற்போது பிந்தைய நடுக்கங்களைக் கண்டறிவதற்கு பிரதான பூகம்பங்கள் சார்ந்த கணக்கீடுகளின் தொகுப்புகளை பயன்படுத்துவதைக் காட்டிலும், இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் கணக்கீட்டுத் திறனைப் பயன்படுத்தி பல வழிகளிலும் பிந்தைய நடுக்கங்கள் பற்றிய ஊகங்களை மேற்கொள்ள முடியும்.
‘‘நரம்பியல் வலையமைப்புத் தொழில்நுட்பம் மிகவும் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது’’ என்று இதன் முதன்மை ஆராய்ச்சியாளரும் கனெக்டிகட் பல்கலைக்கழகப் பேராசிரியருமான போயபே தேவ்ரிஸ் கூறினார்.
அமெரிக்க புவியியல் மையத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளரான எலிசபெத் கோச்ரன், ‘‘இந்த ஆராய்ச்சியின் அணுகுமுறை மிகவும் சுவாரசியமாக உள்ளது’’ என்று கூறுகிறார்.
‘‘இந்த ஆராய்ச்சி, பிந்தைய நிலநடுக்கங்கள் குறித்த பார்வையை தெளிவாக அளித்தாலும், பல்லாயிரக்கணக்கான தரவுகளைப் பயன்படுத்தி இதைக் கணிப்பது ஆச்சரியத்தை அளிக்கவில்லை’’ என்று கூறுகிறார்.
‘‘இது பயனளிக்கக்கூடிய நிலையை அடைவதற்கு வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. நாங்கள் இதை ஊக்கமளிக்கும் முதல் படியாகத்தான் பார்க்கிறோம்’’ என்று தேவ்ரிஸ் சொல்கிறார்.
அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் ஏற்கனவே அமலில் உள்ள, பூகம்பத்தை முன்னரே கண்டறிந்து எச்சரிக்கும் திட்டங்களுடன் சேர்த்துப் பயன்படுத்தக்கூடிய அணுகுமுறையை இதில் பின்பற்ற இயலாது. ஆனால், நரம்பியல் வலையமைப்பு மூலம் பூகம்பங்கள் மற்றும் பிந்தைய நடுக்கங்கள் குறித்த தரவுகளைக் கொண்டு புதிய வழிகளில் பதில்களைக் கண்டறியலாம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற அடிக்கடி பூகம்பம் ஏற்படும் பகுதிகளில் சீஸ்மோமீட்டர்கள் எனப்படும் பூகம்ப பதிவு கருவிகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளன. அவை நம்மால் உணரமுடியாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவில் நடைபெறும் பூகம்பத்தைக்கூட பதிவு செய்யக்கூடியவை.
அங்கிருந்துதான், மேற்கண்ட ஆய்வுக்கான தரவுகள் பெறப்படுகின்றன.
பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய முடிந்தால் நல்லதுதான்!
Related Tags :
Next Story