தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 8 Sep 2018 10:30 PM GMT (Updated: 8 Sep 2018 1:42 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தேசிய ஊட்டச்சத்து மாத விழா

தூத்துக்குடி மாவட்ட சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டு, பாரம்பரிய உணவு தயாரித்தல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில், ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

உடல்நலம்

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது;–

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மிக முக்கிய நோக்கத்துடன் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வளர் இளம் பெண்கள் ஆகியோர்களுக்கு சத்துணவு வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சத்துணவு வகைகளை முறையாக உண்டாலே பாதி நோய்களை தடுக்க முடியும். 1 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து உணவு வழங்கினால் தான் அவர்கள் சரியான வளர்ச்சி பெற்று உடல்நலத்தில் சிறந்து விளங்குவதுடன் கல்வியிலும் சிறந்து விளங்க முடியும்.

வளர் இளம் பெண்கள் சரியான சத்துணவு இல்லாத காரணத்தினால் முக்கியமாக ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. இதனால் கர்ப்ப காலத்தின்போது குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே எந்தந்த வயதில் எதுபோன்ற உணவுகளை உண்ண வேண்டும் என இந்த கண்காட்சி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,505 அங்கன்வாடி மையங்களுக்கும், முருங்கை மற்றும் பப்பாளி கன்றுகள் வழங்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் இருந்து பெறப்படும் முருங்கைக்கீரை மற்றும் பப்பாளி பழங்கள் குழந்தைகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காய்கறி தோட்டங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக 50 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காய்கறி தோட்டங்கள் பல்வேறு துறைகளின் உதவியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பயிரிடப்படும் காய்கறிகள் அந்த பள்ளி சத்துணவு மூலம் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. தேசிய ஊட்டச்சத்து மாத விழாவின் போது சுகாதாரத்தை மேம்படுத்திடவும், அங்கன்வாடி கழிப்பறைகள், சுகாதார வளாக கழிப்பறைகள், தனிநபர் இல்ல கழிப்பறைகள் பயன்படுத்துதல் உள்ளிட்டவைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் சுகாதார விழிப்புணர்வு, சத்துணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்னாண்டோ, மகளிர் திட்ட உதவி அலுவலர் கலைசெல்வி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சாம்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story