வியாசர்பாடியில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு


வியாசர்பாடியில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 8 Sep 2018 10:30 PM GMT (Updated: 8 Sep 2018 5:13 PM GMT)

வியாசர்பாடியில், பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 300 வீடுகள், தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த வீடுகளை இடித்து விட்டு குடிசை மாற்று வாரியம் சார்பில், அதே இடத்தில் ‘லிப்ட்’ உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய 13 அடுக்குமாடிகளை கொண்ட 465 வீடுகளை கட்டி, அங்கு ஏற்கனவே குடியிருப்பவர்களுக்கே வழங்க முடிவு செய்து, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்காக பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. புதிய வீடுகள் கட்ட வசதியாக அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்யும்படி பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் சிலர் மட்டுமே காலி செய்த நிலையில், பெரும்பாலானவர்கள் 3 மாதங்களுக்கு மேலாகியும் வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர்.

இதையடுத்து குடிசைமாற்றுவாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன், பெரம்பூர் தாசில்தார் சைலேந்திரன், மாநகராட்சி மண்டல செயற்பொறியாளர் சுந்தரேசன், உதவி பொறியாளர் அருண் மற்றும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அங்கு சென்று அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் உடனடியாக வீடுகளை காலி செய்யும்படி கூறினர். அந்த வீடுகளுக்கு சென்ற மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

ஆனால் அங்கிருந்தவர்கள், வீடுகளை காலிசெய்ய மாட்டோம் என்று கூறி வீட்டின் உள்ளேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமி‌ஷனர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் எம்.கே.பி. நகர் உதவி கமி‌ஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் என 300–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட துணை கமி‌ஷனரிடம், வீடுகளை காலி செய்ய மேலும் ஒரு வாரம் கூடுதல் காலஅவகாசம் கேட்டனர். ஆனால் அதற்கு துணை கமி‌ஷனர் சாய்சரண் தேஜஸ்வி மறுத்துவிட்டார். இதனால் அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீஸ் உதவியுடன் அதிகாரிகள், வீடுகளுக்குள் அமர்ந்திருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பின்னர் அந்த வீடுகளின் கதவு, ஜன்னல்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். சாலை மறியலில் ஈடுபட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரிக்கை விடுத்ததால் சாலை மறியல் செய்வதை பொதுமக்கள் கைவிட்டனர்.

வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல்கள் அகற்றப்பட்ட பிறகு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கும் என குடிசைமாற்றுவாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பகுதியில் 5 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது.

Next Story