சென்னை மாநகராட்சியில் தொழில்வரி கிடு, கிடு உயர்வு


சென்னை மாநகராட்சியில் தொழில்வரி கிடு, கிடு உயர்வு
x
தினத்தந்தி 8 Sep 2018 10:15 PM GMT (Updated: 2018-09-08T23:16:19+05:30)

சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சம் ரூ.100 தொழில்வரி கட்டியவர்கள் இனி ரூ.135 கட்ட வேண்டும். இதன் மூலம் மாநகராட்சியின் தொழில் வரி கிடு, கிடு என்று உயர்ந்து உள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில மற்றும் பிற அரசுத்துறை சார்ந்த அலுவலர், பணியாளர், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழில் புரிவோர், வணிகர்கள் ஆகியோரிடமிருந்து 6 மாதத்திற்கு ஒருமுறை தொழில் வரி வசூலிக்க சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதி 1919 துணை விதி 138–ன் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதி 1919 துணை விதி 110–ன் கீழ் நிறுவனங்களின் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் மூலதனத்தை பொறுத்து நிறும வரி செலுத்த வேண்டும்.

2018–2019–ம் நிதியாண்டுக்கான முதலாம் அரையாண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட தொழில் வரியை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைபடி செலுத்த வேண்டும்.

முதலாம் அரையாண்டுக்கான தொழில் வரி மற்றும் நிறும வரியை வரும் 30–ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிப்படி அபாரதம் மற்றும் வட்டி தொகை கணக்கீடு செய்து வசூலிக்கப்படும். நடப்பு நிதியாண்டுக்கான முந்தைய தொழில் வரி ஏற்கனவே செலுத்தியவர்கள் திருத்தியமைக்கப்பட்ட தொழில்வரிக்கான வித்தியாசத் தொகையை செலுத்த வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின், அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்ய மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story