‘இளைஞர்கள் விவசாயத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்’ அமைச்சர் பாஸ்கரன் அறிவுறுத்தல்
இளைஞர்கள் விவசாயத்தை பாதுகாக்க முன்வருவதுடன், அதனை என்றும் கைவிட்டுவிட கூடாது என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை தாலுகா வி.புதுக்குளம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம், கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது:–
தமிழக அரசு மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்திற்கு தேவையான அடிபபடை வசதிகள் செய்து தரப்படும். முக்கியமாக சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்படும். மேலும் பஸ் வசதி இல்லை என்று சொன்னார்கள். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிராமத்தில் மக்கள் ஒற்றமையாக இருக்க வண்டும். விவசாயத்தை மறக்கக்கூடாது. நான் இன்றும் விவசாயம் செய்து வருகிறேன். 20 ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளேன். அங்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி வருகிறேன். இளைஞர்கள் என்றும் விவசாயத்தை விட்டுவிட கூடாது. அவர்கள் விவசாயத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் 23 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கும், மகளிர் திட்டத்தின் மூலம் 33 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் 19 பயனாளிகளுக்கு பசுமை வீட்டிற்கான ஆணைகளும், 9 பயனாளிகளுகுகு வரப்பு கட்டுதல் மற்றும் பண்ணைக்குட்டை அமைப்பதற்கு உத்தரவும், வேளாண்மைத்துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்களும் என மொத்தம் 148 பயனாளிகளுக்கு ரூ.86 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.