திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் கலெக்டர் அறிவிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Sep 2018 11:00 PM GMT (Updated: 8 Sep 2018 7:05 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக் கும் இடங்களை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. நீர் நிலைகளான கடல், ஆறு மற்றும் குளம் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. வருகிற 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகளை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எந்த வித ரசாயன கலவையற்றதுமான, கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதலின் படி கரைக்க அனுமதிக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நகர் ஏரி, கூவம் ஏரி, திருமழிசை குளம், ஊத்துக்கோட்டை குளம், சித்தேரி, கொசஸ்தலை ஆறு, காந்திசாலை குளம், வண்ணான் குளம், கரீம் பீடி குளம், பண்டாரவேடு குளம், பராசக்தி நகர் குளம், கனகம்மாசத்திரம் குளம், ஏழுகண் பாலம், பக்கிங்காம் கால்வாய், பழவேற்காடு ஏரி, காக்களூர் ஏரி, திருவொற்றியூர் யூனிவர்சல் கார்போரண்டம் பின்புறம், பாப்புலர் எடை மேடை (திருவொற்றியூர்) பின்புறம், எண்ணுார் ராமகிருஷ்ணா நகர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் கண்டறிப்பட்டுள்ளது.

எனவே விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story