சிதம்பரம் அருகே வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி மறியல் செய்ய திரண்ட கிராம மக்கள்
சிதம்பரம் அருகே வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி சாலைமறியல் செய்ய கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்,
கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் மேட்டூ அணைக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் டெல்டா மாவட்டத்தின் கடைபகுதியான கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடியது. மேலும் சிதம்பரம் அருகே உள்ள பழையகொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
இதனால் வையூர், கண்டியாமேடு, அகரநல்லூர், மணவெளி, பழையநல்லூர், வல்லம்படுகை, வேளக்குடி, மடத்தான்தோப்பு, பெராம்பட்டு, கீழக்குண்டலப்பாடி அக்கறைஜெயகொண்டபட்டினம், திட்டுகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், மேற்கண்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியதால் பயிர்கள் அனைத்து மூழ்கியது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனால் இதுவரை நிவாரண தொகை வழங்கவில்லை.
இந்த நிலையில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சிதம்பரம்– சீர்காழி சாலையில் கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலக்குடி பஸ் நிறுத்தம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மறியல் செய்ய முயன்றனர்.
இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் செய்ய முயன்றவர்களை தடுத்து நிறுத்தி கோட்டாட்சியர் தலைமையில் பேசி முடிவு எடுக்கலாம் என அழைப்பு விடுத்தனர். இதை ஏற்ற கிராம மக்கள் போராட்டம் நடத்தும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் தாசில்தார் தமிழ்செல்வன், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் சஞ்சீவி, விவசாயிகள் சங்கம் ரவீந்திரன், செந்தில்குமார், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை கூட்டத்தில் வருகிற 31–ந் தேதிக்குள் கிராம மக்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.