என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி


என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
x
தினத்தந்தி 8 Sep 2018 11:45 PM GMT (Updated: 8 Sep 2018 10:23 PM GMT)

என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

உள்ளாட்சி அமைப்புகளின் டெண்டர்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முறைகேடு செய்ததாக கூறி ஒரு தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தது.

அதற்கு விளக்கம் அளித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

ஒரு தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் என் மீது சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது. அவை ஆதாரமற்றவை. அதில் கூறப்பட்ட புள்ளிவிவரங்களும் தவறானவை. நாங்கள் நல்லது செய்தாலும் அதையும் எடுத்துச்சொல்ல வேண்டும். என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் குறிப்பிட்டு உள்ளவர்கள் 20 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் கூட அவர்கள் கட்டுமான தொழில் செய்துள்ளனர்.

எந்த டெண்டரும் விதிமுறைகளின் படிதான் விடப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறி எதுவும் செய்யப்படவில்லை. இதற்கும், எனது அரசியலுக்கும் தொடர்பு இல்லை. எனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி ஒரு டெண்டர் கூட என்னை சேர்ந்தவர்களின் நிறுவனத்துக்கு ஒதுக்கியது இல்லை. என் தந்தை காலத்தில் இருந்து தொழில் செய்து வருகிறோம்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது வழக்கு போட வேண்டாம் என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளதால் இரண்டொரு நாளில் வழக்கு தொடுக்க உள்ளேன். உள்ளாட்சி துறையின் சிறந்த செயல்பாடுகளுக்கு 3 விருதுகளை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க உள்ளது.

என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு காரணம் யார்? என்பதும் எனக்கு தெரியும். இந்த ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. இந்த ஆட்சிக்கு உறுதுணையாக உள்ள நான், அமைச்சர் தங்கமணி மற்றும் சில மூத்த அமைச்சர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டை கூறினால் நாங்கள் பின்வாங்கி விடுவோம் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

நாங்கள் இந்த கட்சி, ஆட்சிக்கு உறுதுணையாக இருப்போம். எங்களை பொறுத்தவரை நேர்மையாக, நியாயமாக செயல்படுகிறோம். இத்தகைய அச்சுறுத்தலுக்கு நானோ, அமைச்சர் தங்கமணியோ பயப்பட மாட்டோம். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது போடப்பட்ட பல வழக்குகளை சந்தித்துள்ளோம். பொதுமக்களுக்கு என்ன நன்மைகள் செய்ய வேண்டும். கட்சியை எப்படி வழி நடத்தி செல்ல வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

குட்கா விவகாரத்தில் மீண்டு வருவேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story