இந்தியாவில் இருந்து 200 வெளிநாடுகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து 200 வெளிநாடுகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் மருந்து, மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக அகில இந்திய பார்மசி கவுன்சில் தலைவர் டாக்டர் சுரேஷ் கூறினார்.
ஊட்டி,
அகில இந்திய பார்மசி கவுன்சில் தலைவர் டாக்டர் சுரேஷ் ஊட்டி ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் மாணவ–மாணவிகளுடன் நேற்று கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடிக்கு மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து, மாத்திரைகள் 200 வெளிநாடுகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. உலக அளவில் இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்து, மாத்திரைகள் தரமாகவும், குறைந்த விலையில் கிடைக்கும் வகையிலும் உள்ளது. மத்திய அரசின் பாரத பிரதமர் திட்டத்தில் குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் வகையில் மருந்து கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த கடைகளில் கிடைக்கும் மருந்து, மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைப்பதால், கம்பெனி மருந்துகளுக்கு சமமாக இல்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்.
அவ்வாறு பொதுமக்கள் நினைப்பது தவறு. கம்பெனியில் உற்பத்தி செய்யப்படும் மாத்திரைகளுக்கு இணையாக தரம் மிக்க மாத்திரைகள் ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இந்த மாத்திரைகளை பொதுமக்கள் வாங்கி பயன் பெறலாம். இந்த கடைகளில் மருந்து, மாத்திரைகளை வழங்க மருந்தாளுனர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் உரிய மருந்துகளை நோயாளிகளுக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தெளிவாக எடுத்து கூறி வழங்குகின்றனர்.
நாடு முழுவதும் 2 ஆயிரம் பார்மசி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் 5 ஆயிரம் பேராசிரியர்கள் பணிபுரிகிறார்கள். தற்போது பார்மசி கல்வியை 10 லட்சம் பேர் முடித்து உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக பார்மசி கவுன்சிலில் பதிவு செய்வதில் சிரமங்கள் இருப்பதால், அகில இந்திய அளவில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. அவரவர் மாநில கவுன்சிலில் இருந்தே அகில இந்திய பார்மசி கவுன்சிலில் பதிவு செய்வதால், சம்மந்தப்பட்ட பார்மசிஸ்ட் எங்கு பணிபுரிகிறார், எந்த பணியில் இருக்கிறார் என்பதை எளிதாக கண்டறிய முடியும். அவர் வேறு மாநிலத்துக்கு வேலைக்கு செல்லும் போது, பதிவின் மூலம் பணியில் சேரலாம்.
உலக அளவில் பிறக்கும் குழந்தைகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தரம் மிகுந்த தடுப்பு சொட்டு மருந்துகளில் ஒரு சொட்டு மருந்தாவது பயன்படுத்தாமல் இல்லை. அந்த அளவுக்கு இந்தியாவில் மருந்து உற்பத்தியின் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. மைசூருவில் இயங்கி வரும் ஜெ.எஸ்.எஸ். அகாடமி அமைப்பு மூலம் ஊட்டியில் முதல் முறையாக தேசிய பல்கலைக்கழக மானியக்குழு அனுமதியுடன் புதியதாக சுற்றுச்சூழல் அறிவியல், ஊட்டச்சத்து உணவியல், உயிரி வேதியியல் ஆகிய 3 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு, முதுகலையில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு முதல் இளங்கலையில் அந்த பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. ஜெ.எஸ்.எஸ். அகாடமி தேசிய அளவில் 35–வது இடம் வகிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கல்லூரி முதல்வர் டாக்டர் தனபால் உடனிருந்தார்.