பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது


பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது
x
தினத்தந்தி 9 Sep 2018 12:33 AM GMT (Updated: 9 Sep 2018 12:33 AM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது என்று விழாக்குழுவினருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு அழகுத்துரை தெரிவித்தார்.

பெரம்பலூர்,

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு போலீசார் பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாகவும், சிலைகள் ஊர்வலம் தொடர்பாகவும் விழாக்குழுவினருடனான ஆலோசனை கூட்டத்தை நேற்று பெரம்பலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அழகுத்துரை தலைமை தாங்கி பேசுகையில், விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு மேற்கூரைகள் இரும்பு தகடு அல்லது சிமெண்டிலான கூரைகளை கொண்டு கொட்டகை அமைக்க வேண்டும். தென்னங்கீற்று போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை விழாக்குழுவினர் கட்டாயம் பயன்படுத்த கூடாது. பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை ஆகியவை அருகே விநாயகர் சிலைகள் வைக்க கூடாது. சிலை வைக்கும் இடத்தில் பெட்டி வடிவிலான ஒலி பெருக்கியை பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்த கூடாது. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்குள் முடிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது பட்டாசு போன்ற வெடி பொருட்களை கட்டாயம் பயன்படுத்த கூடாது.

போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வழியில் தான் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும். வேறு வழியில் கொண்டு செல்லக்கூடாது. விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாகவும், சிலைகள் ஊர்வலம் தொடர்பாகவும் அரசு வகுத்துள்ள வழிமுறைகளை விழாக்குழுவினர் பின்பற்ற வேண்டும் என்றார். மேலும் அவர் விழாக்குழுவினரின் சந்தேகங்களுக்கு பதிலளித்து பேசினார். கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி (பெரம்பலூர்), ராஜ்குமார் (பாடாலூர்), கலா (அரும்பாவூர்), போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார் (மருவத்தூர்), ராஜா (பாடாலூர்), செல்வராஜ் (அரும்பாவூர்) ஆகியோரும் விழாக்குழுவினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள விழாக்குழுவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Next Story