‘அடடா மறந்துபோச்சே....!’ இப்படி அடிக்கடி நீங்கள் சொல்கிறீர்களா?


‘அடடா மறந்துபோச்சே....!’ இப்படி அடிக்கடி நீங்கள் சொல்கிறீர்களா?
x
தினத்தந்தி 9 Sep 2018 7:36 AM GMT (Updated: 9 Sep 2018 7:36 AM GMT)

நன்றாக பழகியவர்களை வெகுநாட்கள் கழித்து பார்க்கும் போது சிலருக்கு சட்டென்று அவருடைய பெயர் மறந்து போய்விடும். ஆனால் அவரோ பழைய நினைவு களுடன் அன்பாக நலம் விசாரித்துக்கொண்டிருப்பார்.

ன்றாக பழகியவர்களை வெகுநாட்கள் கழித்து பார்க்கும் போது சிலருக்கு சட்டென்று அவருடைய பெயர் மறந்து போய்விடும். ஆனால் அவரோ பழைய நினைவு களுடன் அன்பாக நலம் விசாரித்துக்கொண்டிருப்பார். அப்போதும் அவருடைய பெயர் நினைவுக்கு வராது. அதனால் வேறு வழியின்றி சிலர் ‘உங்கள் பெயர் ஞாபகம் இல்லையே?' என்று சொல்லி, அவர்களிடமே பெயரை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அது அவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும்.. ‘நாம் எப்படியெல்லாம் அவரிடம் பழகினோம். ஒன்றாக இருக்கும்வரைதான் நம்மை நினைவில் வைத்திருந்தார். பிரிந்தவுடன் நம்மை மறந்துவிட்டார்’ என்று நினைத்துவிடுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் அவரிடம் தொடர்ந்து பேச்சு கொடுக்க வேண்டும். பழைய நினைவுகளை அசைபோடும்போது நிச்சயம் பெயர் ஞாபகத்திற்கு வர வாய்ப்பிருக்கிறது.

ஆனாலும் ஒரு சிலருடைய பெயர் எளிதில் நினைவுக்கு வராது. அப்போது அவரிடமே பெயரை கேட்டு தெரிந்துகொண்டு, ‘உங்கள் பெயர் மிகவும் அபூர்வமானது. அதனால்தான் உடனடியாக நினைவுக்கு வரவில்லை. சாதாரணப் பெயராக இருந்தால் நினைவுக்கு வந்திருக்கும். இனி உங்கள் ெபயரை மறக்கவேமாட்டேன். என்னால் மறக்க முடியாத நபர்களில் நீங்களும் ஒருவர்’ என்று பொறுமையாக அவரிடம் பேசி, அவரது அன்பை தக்கவைத்துக்கொள்ளவேண்டும்.

எப்போதுமே உங்களை தேடி வந்து ஒருவர் பேசுகிறார் என்றால் அவர் நிச்சயம் உங்கள் பெயரை நினைவில் வைத்திருப்பார். அவர் உங்கள் பெயருக்கு தரும் மரியாதையை, நீங்களும் அவரது பெயருக்கு தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருக்கும்.

எல்லோருடைய பெயரையும் ஞாபகம் வைத்துக் கொள்வது சவாலான விஷயம்தான். அதிலும் நெருங்கி பழகியவர்கள் பெயர் மறந்து போவதற்கு அவரை பெயரை சொல்லி அழைக்காமல் பழகியிருப்பதும் காரணமாக இருக்கும். அதனால் கூடுமானவரை வயதானவர்களை தவிர்த்து மற்றவர்களை பெயர் சொல்லி அழையுங்கள். அதனால் மரியாதை குறைவு ஒன்றும் வந்துவிடாது. பெயர் சொல்லி அழைக்கும் அதே நேரம் மரியாதையையும் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவரை பெயர் சொல்லி அழைக்கும் போதுதான் அவர் நமக்கு மிக நெருக்கத்தில் வருவார். பகைவனாக இருந்தாலும் பாசத்தோடு பெயர் சொல்லி அழைக்கும்போது அவர் நண்பனாகி விட வாய்ப்்பு இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் பெயர் மிகவும் முக்கியமானது, மரியாதைக்குரியது. அதை நாம் நினைவில் வைத்துக்கொண்டு பழகும்போதுதான் அவரிடத்திலும் தக்க மரியாதை வெளிப்படும். திடீரென்று பார்க்கும்போது பெயர் தெரியாமல் தர்மசங்கடத்திற்குள்ளாகும் நிலை ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவர் பெயரையும் மனதிற்குள் பலமுறை சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள். அது பழகிவிடும். ஒரே மாதிரி பல பெயர்கள் இருந்தால் அவர்கள் உருவத்தோடு இணைந்து கற்பனை செய்து பலமுறை சொல்லிப் பார்த்து நினைவில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும்.

எப்போதுமே ஒருவர் உருவத்தைப் பார்த்ததும் அவரது பெயர் நினைவுக்கு வந்துவிட வேண்டும். அப்போது அவரது பெயரைக் கூறி அழைத்தால் அவர் மகிழ்ச்சியடைவார். என்றோ ஒருநாள் பார்த்தவர் பெயரையும் நினைவில் வைத்துக்கொண்டு சொல்லும் போது உங்கள் நினைவாற்றல் மீது அவருக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படும். ‘நம்மை இன்னும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறாரே?’ என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போவார். உங்கள் மீதான மதிப்பும் உயர்ந்துவிடும். அவர் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுவீர்கள். மற்றவர்களிடத்திலும் உங்களை பற்றி பெருமையாக பேசுவார். நல்ல குணம் கொண்டவராக, பண்பாளராக மதிப்பிடப்படுவீர்கள்.

அதற்கு மாறாக அவரது பெயரை நீங்கள் மறந்திருந்தால், அடுத்தமுறை சந்திப்பதற்கு அவர் ஆர்வம் காட்டமாட்டார். உங்களைவிட்டு சற்று விலகியே நிற்பார். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், யாரையும் நீங்கள் ஒரே ஒருமுறை மட்டும் சந்திப்பதில்லை. ஒவ்வொருவரையும் திரும்பவும் சந்திக்கவேண்டியதிருக்கும். அவர்களால் உங்களுக்கு ஏதேனும் ஒரு காரியம் நடக்க வேண்டியிருக்கும். நீங்கள் அவர் பெயரை மறந்துபோயிருந்தால் அந்த காரியம் நடக்காமல் போய்விடக்கூடும். அதற்காக முகத்தை நினைவு வைத்துக்கொள்வதுபோல் பெயரையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். பெயர் என்பது உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். பெயரையே மறந்துவிடுவது அந்த நபரையே மறந்து விடுவதற்கு சமமானது.

ஒருவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்வது ஒருவகை கலை. எல்லா நினைவாற்றலுக்கும் இது அடிப்படையான விஷயம். அதனால் பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மூளைக்கு பயிற்சியளிக்க வேண்டும். அது மற்ற விஷயங்களையும் அதேபோல நினைவில் வைத்துக்கொள்ளும். ஞாபக மறதி ஒரு அசவுகரியமான விஷயம். எதுவுமே நினைவில் நிற்காமல் போவது மூளைக்கும் நல்லதல்ல. நமக்கும் நல்லதல்ல. மூளையை சரியாக வேலைசெய்யவிடுங்கள்.

புதிதாக அறிமுகமாகிறவர்களை சந்திக்கும்போது விசிட்டிங் கார்ட் பெற்றுக்கொள்ளுங்கள். அதை பலமுறை நீங்கள் பார்க்க நேரும்போது இயல்பாகவே அவருடைய பெயர் மனதில் பதிந்து விடும். வலைத்தளம் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு 84 சதவீதம் பேர் நன்கு பழகியவர்கள் பெயரைகூட மறந்து விடுகிறார்கள். வலைத்தளத்தை பயன்படுத்தும் அனைவருமே நினைவாற்றலை மேம்படுத்தவும் பயிற்சி பெற்றாகவேண்டும்.

ஒருவருடைய பெயர் என்பது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நினைவாற்றல் அப்படிப்பட்டதல்ல. அது ஏற்படுத்தும் அதிர்வுகள் மிக அதிகம். ஒவ்வொருவரை சந்தித்து முடித்த பின்பும் சிறிது நேரம் கழித்து, ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருவரை பார்த்தோமே. அவர் பெயர் என்ன?’ என்று திரும்ப நினைவு கூர்ந்து பாருங்கள். அப்படி ஒவ்வொரு பெயரையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது ஒரு பயிற்சி. மீண்டும் அவரை சந்திக்கும்போது அவரது பெயரை சொல்லி அழையுங்கள். விடைபெறும் போது ஒருமுறை பெயரைச் சொல்லி விடைகொடுங்கள். இவ்வாறு செய்தால், அவருடைய பெயர் அப்படியே மனதில் நின்றுவிடும்.

இன்றைய புதிய தொழில்நுட்பங்கள் நம்மை சிந்திக்கவிடுவதில்லை. அதை மட்டுமே நம்பியே இருப்பது மிகப்பெரிய தவறு. அதன் போக்கில் சென்று விடக்கூடாது. பெயர், தொலைபேசி எண், எல்லாமே அலைபேசியில் இருக்கிறது. அவைகளை எல்லாம் நாம் நினைவில் வைத்துக்கொள்ள முன்வர வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை நமது தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதனிடம் நமது மூளையை அடகுவைத்துவிடக்கூடாது. நிறைய பேர், இன்று என்ன தேதி, கிழமை என்று கேட்டால் கூட கம்ப்யூட்டர்ஜியைக் கேட்டுதான் பதிலளிக்கிறார்கள். இந்த நிலைமை தொடரக் கூடாது. மூளை வளமாக சிந்தித்தால்தான் வாழ்க்கை நலமாக இருக்கும்.

Next Story