மிளகாய்த் திருவிழா
மணிப்பூர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் விளையும் மிளகாய் தனித்துவமான சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த மிளகாய் 8 அங்குலம் வரை வளரும்.
மணிப்பூர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் விளையும் மிளகாய் தனித்துவமான சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த மிளகாய் 8 அங்குலம் வரை வளரும். மற்ற மிளகாய்களைவிட இதில் கால்சியம், வைட்டமின் சி, கரோட்டின், ஆன்டி ஆக்சிடெண்ட் போன்றவை அதிகம். அதிக காரத்தன்மையும் கொண்டது. மாறுபட்ட சுவையையும் உள்ளடக்கியது. இந்த மிளகாய் விளைச்சலையும், அதை விற்பனை செய்வதையும் அந்த மாநில மக்கள் ஒரு திருவிழாவாகவே கொண்டாடுகிறார்கள்.
மணிப்பூர் மாநிலம் உகுல் மாவட்டத்திலுள்ள சிரராஹாங்க் கிராமம்தான் இந்த மிளகாயின் பிறப்பிடம். இந்த கிராமம் இம்பாலில் இருந்து 66 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அங்கு 200 பேர்தான் வசிக்கிறார்கள். விவசாயம்தான் பிரதானம் என்றாலும் மிளகாய் சாகுபடி செய்வதில்தான் தீவிர கவனம் செலுத்துகிறார்கள். ஏனெனில் மற்ற பயிர்களைவிட மிளகாயில்தான் அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இந்த மிளகாய் ரகத்திற்கு ‘ஹாதேய்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். சிரராஹாங்க் கிராமத்தை சுற்றியுள்ள மலைப்பகுதியில் மட்டும்தான் இந்த மிளகாய் விளைகிறது. மார்ச் மாதத்தில் மிளகாய் செடிகள் நடவு செய்யப்பட்டு ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் மிளகாய் விளைச்சல் தொடங்கிவிடுகிறது. அங்குள்ள விவசாயிகள் இயற்கை விவசாயத்தை பின்பற்றி சாகுபடி செய்வதாலும் இதற்கு மவுசு அதிகரித்துள்ளது.
இவர்கள் மிளகாய் திருவிழாவை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். திருவிழாவில் பச்சை, சிவப்பு நிற மிளகாய்களை குவித்து வைத்து விற்பனை செய்கிறார்கள். காய்ந்த மிளகாய், மிளகாய் ஊறுகாய், மிளகாய் தூள் போன்றவைகளையும் காட்சிப்படுத்தி வைக்கிறார்கள். அவைகளை வாங்குவதற்கு பல பகுதியில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். பச்சை மிளகாய் கிலோ 60 ரூபாயாகவும், காய்ந்த மிளகாய் கிலோ 500 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ‘இந்த மிளகாய்கள் கடவுள் கொடுத்த பரிசு’ என்பதை திருவிழாவின் மைய கருத்தாக பதிவு செய்கிறார்கள்.
Related Tags :
Next Story