மானாமதுரை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 8 போலீஸ்காரர்கள் காயம்


மானாமதுரை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 8 போலீஸ்காரர்கள் காயம்
x
தினத்தந்தி 10 Sept 2018 3:15 AM IST (Updated: 10 Sept 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 8 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த மே மாதம் நடந்த வன்முறை சம்பவத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 10–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கச்சநத்தம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் திருப்பாச்சேத்தியில் தங்கியுள்ளனர். அவர்கள் தினசரி அங்கிருந்து கச்சநத்தம் கிராமத்திற்கு போலீஸ் வாகனத்தில் சென்று, மீண்டும் திரும்புவது வழக்கம். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று ஒரு போலீஸ் வாகனத்தில் 10–க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கச்சநத்தம் சென்று கொண்டிருந்தனர்.

திருப்பாச்சேத்தி–தஞ்சாக்கூர் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிட சாலையோரத்தில் போலீஸ் வாகனத்தை டிரைவர் இறக்கியுள்ளார். அப்போது போலீஸ் வாகனம் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். பின்னர் காயமடைந்த அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பழையனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story