காரைக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்


காரைக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Sept 2018 4:30 AM IST (Updated: 10 Sept 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அந்த கடை மூடப்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடி ரெயில்வே பீடர் ரோட்டில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு அந்த கடைக்கு மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டன. இந்தநிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இதனை அறிந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200–க்கும் மேற்பட்டோர் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டம் நடத்திய மக்கள், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கடை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த காரைக்குடி தாசில்தார் மகேசுவரன், வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தேவகி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கடையை மூடினால் தான் கலைந்து செல்வோம் என்று தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.

அதன்பிறகு போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி கடையை மூடுவதாக தெரிவித்ததுடன், கடையை அடைந்தனர். இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story