தி.மு.க.வின் இடையூறுகளை தாண்டி மு.க.அழகிரி பேரணியை சிறப்பாக நடத்தி உள்ளார் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
தி.மு.க.வின் இடையூறுகளை தாண்டி மு.க.அழகிரி பேரணியை சிறப்பாக நடத்தி உள்ளார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம், மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், அவரது தந்தை கருணாநிதி இறந்த 30–ம் நாள் அமைதி பேரணியை மிக சிறப்பாக நடத்தி உள்ளார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அதில் கலந்து கொண்டனர். தி.மு.க.வின் இடையூறுகளை தாண்டி இந்த பேரணியை அழகிரி சிறப்பாக நடத்தி காட்டி உள்ளார். இதன்மூலம் மு.க.அழகிரியின் பணி பற்றி தெரிந்து இருக்கும். அவரது எதிர்காலம் பற்றி போக, போக தான் தெரியும்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை மாநகர், மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். எனவே வெற்றி நிச்சயம்.
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸை வெற்றி பெற வைத்தார். கூட்டணி அமைத்து போட்டியிட்ட தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை. தமிழகத்தில் 234 தொகுதியிலும் அ.தி.மு.க. தனித்து போட்ட்டியிட்டு வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.