எழுமலை அருகே உத்தப்புரத்தில் குடிநீர்கேட்டு பொது மக்கள் சாலை மறியல்


எழுமலை அருகே உத்தப்புரத்தில் குடிநீர்கேட்டு பொது மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Sept 2018 3:30 AM IST (Updated: 10 Sept 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

எழுமலை அருகே உத்தப்புரத்தில் குடிநீர்கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி,

மதுரைமாவட்டம் உசிலம்பட்டியை அடுத்து எழுமலை அருகே உத்தப்புரம் மேலத்தெரு பொதுமக்கள் குடிநீர்கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த கிராமத்தில் கடந்த 2 வருடங்களாக மேலத்தெருவிற்கு மட்டும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவிவந்தது. இந்நிலையில் இத்தெருபொதுமக்கள் தாங்களாகவே வசூல்செய்து சொந்த செலவில் ஏற்கனவே இருந்த ஆழ்குழாயில் மின்மோட்டார் இணைத்து தொட்டியில் தண்ணீர் ஏற்றி குடிநீர்பிரச்சினையை சமாளித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்துபோனதால் ஆழ்குழாயில் சுத்தமாக தண்ணீர் இல்லாமல்போனது. இதுகுறித்து சேடபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் மனுகொடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் முதல் உயர் அதிகாரிகளுக்கு பதிவு தபாலில் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கும்படி புகார்மனு மற்றும் ஆன்லைனில் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் குடிநீர் பிரச்சினைத்தீர்க்கப்படாததால் நேற்று உசிலம்பட்டி எழுமலை சாலையில் உத்தப்புரம் மேலத்தெரு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் இந்தசாலையில் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. முருகேசன், பேரையூர்தாசில்தார் இளமுருகன், உசிலம்பட்டி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரமாராணி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஆர்.டி.ஓ. பொதுமக்களிடம் கூறும்போது, குடிநீர் பிரச்சினையை தீர்த்துவைக்க ஏற்பாடு செய்கிறேன். ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீருக்கு வடிகால்வாரிய அதிகாரிகளுடன் கலந்துபேசி முடிவு எடுக்கிறேன். அதுவரை போராட்டத்தை கைவிடுங்கள் எனக் கூறினார். அதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story