மாவட்ட செய்திகள்

பிரபல நடிகர் கோவை செந்தில் மரணம் + "||" + The famous actor Kovai Senthil is dead

பிரபல நடிகர் கோவை செந்தில் மரணம்

பிரபல நடிகர் கோவை செந்தில் மரணம்
பிரபல நடிகர் கோவை செந்தில் உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.

காமநாயக்கன் பாளையம்,

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் குமாரசாமி என்ற கோவை செந்தில் (வயது 74). பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். பொதுவாக பல சிறு பட்ஜெட் திரைப்படங்கள் மற்றும் கிராமத்து கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் மிகவும் எதார்த்தமான வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.

இவருடைய சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பள்ளிப்பாளையம் ஆகும். பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்த இவர் சினிமா ஆசையில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை சென்றார். நடிகர் கே.பாக்கியராஜ் தனது இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு கை ஓசை’ திரைப்படத்தில் இவரை அறிமுகம்செய்தார்.

கோவை செந்திலும், நடிகர் கே.பாக்கியராஜும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கோவை செந்திலுக்கு தான் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் சிறுவேடங்களில் நடிக்க சந்தர்ப்பங்கள் கொடுத்து உதவி வந்தார். நடிகர் கே.பாக்கியராஜின் ‘மெளனகீதங்கள்’, ‘இது நம்ப ஆளு’ போன்ற திரைப்படங்களிலும், நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’, சரத்குமார் நடித்த ‘ஏய்’ உள்பட 200–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கோவை செந்தில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 4.30 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன் பாளையம் அருகே கரடிவாவியில் உள்ள அவருடைய மாமனாரின் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கோவை செந்திலின் உடல் வைக்கப்பட்டது. துணை நடிகர் திருப்பூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும், உறவினர்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் மதியம் 12.30 மணிக்கு அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோவை மாவட்டம் சூலூரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மறைந்த கோவை செந்திலுக்கு லட்சுமி(65) என்ற மனைவியும், திலக்(40) என்ற மகனும், நர்மதா(43) என்ற மகளும் உள்ளனர்.