வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் - ஆணையாளர் சதீஷ் நேரில் ஆய்வு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் - ஆணையாளர் சதீஷ் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 10 Sept 2018 4:30 AM IST (Updated: 10 Sept 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்த சிறப்பு முகாமை ஆணையாளர் சதீஷ் ஆய்வு செய்தார்.

சேலம்,

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் குறித்த பணிகளை கடந்த 1-ந் தேதி முதல் அடுத்த மாதம்(அக்டோபர்) 31-ந்தேதி வரை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நேற்றும், வருகிற 23-ந் தேதியும், அடுத்த மாதம் 7 மற்றும் 14-ந் தேதிகள் என 4 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்த உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 268 வாக்குச்சாவடி மையங்கள், தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 271 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 539 மையங்களில் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் குறித்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

அஸ்தம்பட்டி மண்டலம் 7-வது வார்டுக்கு உட்பட்ட சி.எஸ்.ஐ. பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் நேரில் ஆய்வு செய்தார். அதே போன்று கொண்டலாம்பட்டி மண்டலம் 46-வது வார்டுக்கு உட்பட்ட குகை மூங்கப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மற்றும் குகை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8 ஆகியவை முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா?, மேலும் வழங்கப்படும் விண்ணப்பங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறதா?, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் உள்ளார்களா?, வாக்காளர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் பாகம் எண், தெரு எண் ஆகிய விவரங்கள் முறையாக எழுதி வைக்கப்பட்டுள்ளதா?, மையங்களுக்கு வரும் வாக்காளர்களுக்கு போதுமான இட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

நேற்று நடந்த இந்த முகாமில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்கள் கோவிந்தன், சுந்தரராஜன், நிர்வாக அலுவலர் மருதபாபு, உதவி வருவாய் அலுவலர் முருகேசன் உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.




Next Story