பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடை உடனடியாக அகற்றம் - கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை


பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடை உடனடியாக அகற்றம் - கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Sept 2018 4:25 AM IST (Updated: 10 Sept 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை எடுத்தார்.

செய்யாறு,

செய்யாறு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று பார்வையிட்டார்.

அப்போது செய்யாறு பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

உடனடியாக கலெக்டர் பஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது நகராட்சியின் மூலம் கட்டப்பட்ட வணிக வளாகம் பாதியிலேயே பணிகள் நிறுத்தப்பட்டு சமூக விரோதிகளின் செயல்களால் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதை கண்ட கலெக்டர், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபுவிடம் உடனடியாக சரிசெய்து பணிகள் முடித்து வணிக வளாகத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து பஸ் நிலையத்தில் நகராட்சியால் பராமரிக்கப்படும் கழிப்பிடத்தினை பார்வையிட்டு தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும், பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் எச்சரிக்கை செய்தார்.

அப்போது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வந்து, பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையினால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். பெண் குழந்தைகள் வைத்துக்கொண்டு பயத்துடனே வசித்து வருகிறோம். 24 மணிநேரமும் மதுபானங்கள் விற்கப்படுவதால் மது குடிப்பவர்கள் வீண் தகராறும், மதுபாட்டில்களை உடைத்து சண்டைகள் போடுவதால் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். இந்த கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

அதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடையை கலெக்டர் பார்வையிட்டு உடனடியாக கடையை அகற்ற உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் நேற்று வழக்கம் போல் 12 மணிக்கு திறக்க வேண்டிய கடை திறக்கப்படவில்லை.

இதனை பார்த்த அப்பகுதி பெண்கள் மற்றும் கடை வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட கலெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்யாறு தாலுகா ஜடேரி கிராமத்தில் பல தலைமுறைகளாக நாமக்கட்டி செய்யும் தொழிலை கிராமமக்கள் செய்து வருகின்றனர். நாமக்கட்டி செய்ய தேவையான சுண்ணாம்பு பாறை மண் தென்பூண்டிப்பட்டு கிராம எல்லையில் எடுக்க சிலர் தடையாக உள்ளதாகவும், அதனால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், நாமக்கட்டி செய்ய தேவையான மூலப்பொருட்களை எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதன்பேரில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஜடேரி கிராமத்திற்கு நேரடியாக சென்று நாமக்கட்டி செய்யும் தொழிலாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். நாமக்கட்டி எப்படி செய்யப்படுகிறது என தொழிலாளிகள் விளக்கியும், செய்தும் காட்டினர்.

பின்னர் கலெக்டர் எப்படி நாமக்கட்டி தட்டுவது என கேட்டு, பெற்றோருக்கு உதவியாக இருந்த மாணவியிடம் இருந்து கட்டையை வாங்கி நாமக்கட்டி செய்யும் மண்ணை எடுத்து தட்டி, தட்டி நாமக்கட்டி உருவாக்கி சரியாக இருக்கிறதா? என கேட்டறிந்தார்.

இதையடுத்து 25 குடும்பங்களுக்கு நாமக்கட்டி மூலப்பொருட்கள் எடுக்க ஒரு ஆண்டிற்கான அனுமதி உத்தரவை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். மீதமுள்ள குடும்பத்தினரும் முறையாக மனுவினை அளித்து அனுமதி உத்தரவை பெற்று கொள்ளலாம் என கூறினார்.

ஆய்வின்போது செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள், தாசில்தார் மகேந்திரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story