அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம்


அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 10 Sep 2018 12:51 AM GMT (Updated: 10 Sep 2018 12:51 AM GMT)

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் மூலம் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறும் முகாமினை கலெக்டர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் விஜயலட்சுமி கூறியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் வரைவு பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்தம்-2019 பணிகள் கடந்த 1-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. அது சமயம் 1.1.2019 அன்று வரை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்று (அதாவது நேற்று) அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. மேலும் வருகிற 22-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 6, 13-ந்தேதி ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவை அந்தந்த கிராம சபைகளில் படித்து பெயர்களைச் சரிபார்க்கும் பணியும் மற்றும் வருகிற 23-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 7, 14-ந்தேதி ஆகிய நாட்களில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் சிறப்பு முகாமும் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி வெளியிடப்படும். எனவே, 18 வயது நிரம்பிய தகுதியான நபர்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தாசில்தார் முத்துலட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story