மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விதை விதைத்து காத்திருக்கும் விவசாயிகள்


மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விதை விதைத்து காத்திருக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 10 Sept 2018 6:24 AM IST (Updated: 10 Sept 2018 6:24 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலப்பரப்பில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகளை விதைத்துள்ளனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் மழையை நம்பி மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்திற்கு முன்பு பெய்யக்கூடிய கோடை மழையில் மண் நன்றாக நனைந்து பொழிவு பெறும். அதன் பிறகு உழவு செய்து விதைப்பதற்கு தயார் நிலையில் நிலத்தை பண்படுத்தி வைத்திருப்பார்கள். தொடர்ந்து ஆடிப்பட்டத்தில் பெய்யும் பருவ மழையின் போது பருத்தி, மக்காச்சோளம், ஆமணக்கு போன்ற விதைகளை விதைப்பது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு மண் பொழிவு பெறும் வகையில், கோடை மழையும் போதுமான அளவு பெய்யவில்லை. இருப்பினும் வேறு வழியில்லாமல் விவசாயிகள் தங்களது நிலங்களை உழவு செய்து ஆடிப்பட்டத்தில் பெய்யும் மழையில் விதை விதைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர். அவ்வாறு காத்திருந்த விவசாயிகளுக்கு மழை பெய்யாமல் ஏமாற்றமே மிஞ்சியது.

இருந்தாலும் நம்பிக்கை தளராத விவசாயிகள் எப்படியாவது ஒரு மழை பெய்தால் விதைத்த விதை முளைத்து கொள்ளும் நம்பிக்கையில் தற்போது ( மழை பெய்யாமலேயே ) விதைகளை ஆட்களை கொண்டும், டிராக்டர் மூலமாகவும் விதைத்து வருகின்றனர். தற்போது வேப்பந்தட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானா வாரியில் 90 சதவீதம் விவசாயிகள் பருத்தி, மக்காச்சோளம் விதைகள் விதைத்து விட்டனர். விவசாயிகளின் நம்பிக்கைக்கு வருண பகவான் கருணை காட்டுவாராபொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story