பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து 15 இடங்களில் மறியல், 519 பேர் கைது


பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து 15 இடங்களில் மறியல், 519 பேர் கைது
x
தினத்தந்தி 11 Sept 2018 4:15 AM IST (Updated: 10 Sept 2018 7:25 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கட்சியினர் 519 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்,

நாடுமுழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. இடது சாரி கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் மாவட்டம் முழுவதும் கடைகள் திறந்திருந்தன. வணிக நிறுவனங்கள் செயல்பட்டன. ஆட்டோ, வேன், லாரி மற்றும் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. மொத்ததில் மக்களில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதுமில்லை.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் காதர் மொய்தீன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையில் 42 பேர் மறியலில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் 57 பேரும், ராஜபாளையத்தில் 24 பேரும் கிருஷ்ணன்கோவிலில் 21 பேரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்திராயிருப்பில் முன்னாள் இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் 65 பேரும் சிவகாசியில் சமுத்திரம் தலைமையில் 29 பேரும் சேத்தூரில் முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமையில் 37 பேரும் மறியல் செய்தனர். திருத்தங்கலில் 30 பேரும் இருக்கன்குடியில் 16 பேரும் அருப்புக்கோட்டையில் இரண்டு இடங்களில் 20 பேரும் காரியாபட்டியில் 39 பேரும் திருச்சுழியில் 31 பேரும் சத்திரப்பட்டியில் 58 பேரும் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 519 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகரில் ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த 10 பேரை போலீசார் சுற்றிவளைத்தனர். விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்பட 7 காங்கிரசாரும் விருதுநகர் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் செல்வம் உள்பட 3 பேரும் ஆக மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் எதிர்கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்திருந்ததையொட்டி பஸ் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story