தி.மு.க.வை வலுப்படுத்த மு.க.ஸ்டாலின்– அழகிரி இணைய வேண்டும் - மதுரை ஆதீனம் பேட்டி
தி.மு.க.வை வலுப்படுத்த மு.க.ஸ்டாலின்–அழகிரி இணைய வேண்டும் என்று கோவையில் மதுரை ஆதீனம் கூறினார்.
பேரூர்,
மதுரை ஆதீனம் நேற்று காலை கோவைக்கு காரில் வந்தார். பின்னர் அவர் செல்வபுரத்தில் உள்ள ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் குட்கா பிரச்சினை பூதாகரமாகி வருகிறது. இதில் சி.பி.ஐ. மத்திய அரசின் கைபொம்மையாக இருப்பதாக கூறுகிறார்கள். அது தவறு. சி.பி.ஐ. தன்னிச்சையாக செயல்படும் ஒரு அமைப்பு. அதற்கென்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் யாரும் தலையிட முடியாது. சி.பி.ஐ. தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபையில் இதுகுறித்து ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றினார். 7 பேரும் நிச்சயம் விடுதலை ஆவார்கள். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும்.
தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். அழகிரி, மு.க.ஸ்டாலின் இருவரும் இடையே உள்ள பழைய கசப்புகளை மறந்து இணைய வேண்டும். அவர்கள் இணைந்து செயல்பட்டால் தி.மு.க. மேலும் வலுப்பெறும். ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.
கமல்ஹாசன் கட்சி, கொடி அறிவித்து விட்டு செயல்படவில்லை. நடிகர்கள் அரசியலில் வெற்றி பெறுவது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் மட்டுமே முடிந்தது. மற்ற நடிகர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது. பா.ஜனதா அரசு விலைவாசி உயர்வை விரைவில் கட்டுப்படுத்தும். வருகிற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆட்சி சிறப்பாக உள்ளது. அதே போல் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடியும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தமிழக முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்குபவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களுக்கு வருகிற தேர்தலில் போட்டியிட அவர் வாய்ப்பு தரமாட்டார்.
தமிழகத்தில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோவில்களில் நடைபெறும் ஊழல்களை ஒழிக்க முடியாது. அதற்காக சாமிக்கு சக்தி இல்லை என்று பொருள் அல்ல. மனிதர்களுக்கு பக்தி குறைந்து விட்டது என்பது தான் சரி.
நித்யானந்தாவால் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் அவர் மறுபடியும் மதுரை ஆதீனமாக உள்ளே நுழைய முடியாது. ஆன்மிகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மை, கண்ணியம் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.