மாவட்ட செய்திகள்

வால்பாறையில் வீட்டுக்குள் குட்டியானை புகுந்ததால் தோட்ட அதிகாரி குடும்பத்துடன் தப்பி ஓட்டம் + "||" + The garden officer escaped with the family after wild elephant entering the house in Valpara

வால்பாறையில் வீட்டுக்குள் குட்டியானை புகுந்ததால் தோட்ட அதிகாரி குடும்பத்துடன் தப்பி ஓட்டம்

வால்பாறையில் வீட்டுக்குள் குட்டியானை புகுந்ததால் தோட்ட அதிகாரி குடும்பத்துடன் தப்பி ஓட்டம்
வால்பாறையில் தொடரும் காட்டுயானைகள் அட்டகாசம் தொடர்கிறது. வீட்டுக்குள் குட்டி யானை புகுந்ததால் தோட்ட அதிகாரி குடும்பத்துடன் தப்பி ஓட்ட பிடித்தார்.

வால்பாறை,

வால்பாறை பகுதிக்கு கடந்த 10 நாட்களாக கேரள வனப்பகுதிகளிலிருந்து காட்டுயானைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.இந்த யானைகள் பல்வேறு கூட்டங்களாக பிரிந்து முடீஸ் எஸ்டேட் சுற்றுவட்டார பகுதியிலும், சிங்கோனா எஸ்டேட் சுற்றுவட்டார பகுதியிலும் முகாமிட்டுள்ளன. இந்த காட்டுயானைகள் கூட்டத்தைச் சேர்ந்த இரண்டு குட்டிகள் உட்பட 8 யானைகள் கொண்ட கூட்டம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தாய்முடி எஸ்டேட் கீழ்பிரிவு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கிருந்த உதவி தோட்ட அதிகாரி சரவணன் என்பவரின் வீட்டின் சமையலறையை உடைத்து உள்ளிருந்த பொருட்களை எடுத்து சாப்பிட்டு சேதப்படுத்தியது. சமையலறையில் பொருட்கள் விழும் சத்தம் கேட்டு, சரவணன் சென்ற பார்த்த போது யானைகள் சமையலறையிருந்த பொருட்களை எடுத்து வீசியது.

உடனே சரவணன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் உள்அறையில் போய் பதுங்கிக் கொண்டார். ஆனால் யானைகள் அங்கிருந்து போகாமல் தொடர்ந்து வீட்டைச் சுற்றி,சுற்றி வந்து அட்டகாசம் செய்தது. மேலும் உடைந்த சமயலறை வழியாக குட்டியானை வீட்டின் உள்அறைக்குள் புகுந்து வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதையும் சேதப்படுத்தியது. இதைப் பார்த்த சரவணன் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு பின் பக்க கதவை திறந்துகொண்டு தேயிலைத் தோட்டம் வழியாக நள்ளிரவில் ஓடி அருகிலிருந்த தேயிலை தொழிற்சாலைக்குள் ஓடி உயிர்தப்பினர். பின்னர் எஸ்டேட் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் உதவியுடன் லாரிகளில் சென்று காட்டுயானைகளை அங்கிருந்து விரட்டினர்.

காட்டுயானைகள் சேதப்படுத்தியதில் சரவணன் வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதும் சேதமடைந்தது.பின்னர் முடீஸ் எஸ்டேட் நிர்வாகத்தினர் சரவணனுக்கு வேறு இடத்தில் குடியிருப்பு வழங்கி நடவடிக்கை எடுத்தனர். இந்த யானைகள் கூட்டம் நள்ளிரவு 2.30 மணியளவில் அங்கிருந்து சென்று தாய்முடி எஸ்டேட் மேல்பிரிவு குடியிருப்புக்குள் நுழைந்து தோட்ட அதிகாரி ஜோனத்தான் என்பவரின் வீட்டின் கதவு ஜன்னலை உடைத்து வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. வீட்டிலிருந்த ஜோனத்தானும் அவரது மனைவியும் அருகிலிருந்த குடியிருப்புக்குள் ஓடி தஞ்சம் புகுந்தனர். இது பற்றி தகவலறிந்ததும் சம்பவஇடத்திற்கு சென்ற மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜ் காட்டுயானைகளை கண்காணிக்கும் பணியை வேட்டைத்தடுப்பு காவலர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். காட்டுயானைகளின் தொடர் தாக்குதல் சம்பவம் குறித்து எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:–

எங்கள் பகுதியில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. ஆகவே வனத்துறையினர் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அருகில் உள்ள பொள்ளாச்சி, உடுமலை, உலாந்தி வனச்சரக பகுதிகளிலிருந்து கூடுதலான வேட்டைத் தடுப்பு காவலர்களை பணியில் அமர்த்தி அவர்களுக்கு தேவையான வாகன வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். யானைகள் முகாமிட்டுள்ள பகுதிகளுக்கு இரவு நேரத்திற்கு முன்னதாகவே சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். எந்த எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்கு அருகில் யானைகள் நிற்கிறது என்பதை அறிந்து அந்த பகுதியில் இரவு முழுவதும் வாகனங்களில் சென்று ரோந்துப்பணி மேற்கொள்ள வேண்டும். குடியிருப்புக்குள் யானைகள் நுழையாமல் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த ஆண்டு கேரள வனப்பகுதியிலிருந்து அதிகப்படியான யானைகள் வால்பாறை வனப்பகுதிகளுக்குள் வந்துள்ளதால் வனத்துறையின் உயர் அதிகாரிகள் வால்பாறை பகுதி மீது கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்றால் ஆபத்துக்களும் உயிர் சேதங்களும் ஏற்படுவதற்கு கட்டாயம் வாய்ப்புள்ளது. எனவே விபரீதங்கள் ஏற்படுவதற்கு முன்னால் வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.