15 இடங்களில் தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் 15 இடங்களில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 559 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்த இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்தது.
அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டமும், கம்யூனிஸ்டு உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மறியல் போராட்டமும் நடத்தினர். கடலூர் அண்ணா பாலம் அருகில் உள்ள சிக்னலில் தி.மு.க. நகர செயலாளர் ராஜா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க. மாநில தேர்தல் பிரிவு செயலாளர் இள.புகழேந்தி, மாவட்ட அவை தலைவர் தங்கராசு, தொ.மு.ச. பழனிவேல், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், தொழிலாளர் அணி ராமராஜ், ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், நகர செயலாளர் ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன், ஸ்ரீதர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 75 பேரை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்து, போடிச்செட்டித்தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் மாநிலக்குழு மாதவன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மருதவாணன், சுப்புராயன், நகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் ராஜேஷ்கண்ணா உள்பட கட்சி நிர்வாகிகள் அண்ணா பாலம் அருகில் சாலை மறியல் செய்தனர்.
இதையத்து மறியலில் ஈடுபட்ட 60 பேரை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்து போடிச்செட்டித்தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
விருத்தாசலம் பாலக்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். இதில் வக்கீல்கள் சந்திரசேகரன், சங்கரய்யா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 52 பேரை விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் மெயின் பஜாரில் இருந்து கட்சியினர் பேரணியாக புறப்பட்டு நெய்வேலி வட்டம் 19-ல் உள்ள துணை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 54 பேரை போலீசார் கைது செய்தனர். குறிஞ்சிப்பாடி சாவடி பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தண்டபாணி உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநிலக்குழு உறுப்பினர் மூசா தலைமையில் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக பஸ் நிலையம் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 40 பேரை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் தமிமுன் அன்சாரி உள்பட 35 பேரை நகர போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரை காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்தனர்.
கிள்ளை கடைவீதியில் தி.மு.க. நகர செயலாளர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 51 பேரை கிள்ளை போலீசார் கைது செய்தனர்.
பி.முட்லூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்து.பெருமாள், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட பொருளாளர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட 39 பேரை பரங்கிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் நிர்வாகிகள் அன்பழகன், வரதன் உள்பட 20 பேர் கலந்து கொண்டனர். அவர்களை திட்டக்குடி போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி தலைமை தபால் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சின்னதுரை தலைமையில் துணை செயலாளர் சக்திவேல், ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் தபால் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை யடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி 4 முனை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நகர செயலாளர் உத்திராபதி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி பழைய போலீஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். வேப்பூர் கூட்டுரோட்டில் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். சிறிது நேரம் மறியலில் ஈடுபட்ட அவர்கள் தாங்களாகவே மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மொத்தம் மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 559 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story