தூத்துக்குடியில் அனல் மின்நிலைய பஸ் மோதி வாலிபர் பலி
தூத்துக்குடியில் அனல் மின்நிலைய பஸ் மோதி வாலிபர் பலியானார். தங்கையை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் போஸ்கோ. இவருடைய மகன் கவுதம் (வயது 24). மீனவரான இவர் நேற்று காலையில் தனது தங்கை வித்யாவை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் வித்யாவை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு கவுதம் மட்டும் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
மோட்டார் சைக்கிள் தெற்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டு இருந்தது. மீன்பிடி துறைமுகம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த தூத்துக்குடி அனல் மின்நிலைய பணியாளர்கள் பஸ், எதிர்பாராத விதமாக கவுதம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் அந்த வழியாக வந்த புதியம்புத்தூரை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.
இந்த விபத்தில் கவுதம், நந்தகுமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார். நந்தகுமார் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக தூத்துக்குடி தென்பாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த நந்தகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் பலியான கவுதம் உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான கிருஷ்ணன் (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story