குழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்


குழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்
x
தினத்தந்தி 11 Sept 2018 8:24 AM IST (Updated: 11 Sept 2018 8:24 AM IST)
t-max-icont-min-icon

இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

குழந்தை பிறந்ததும், கலெக்டர், டாக்டர், என்ஜினீயர், ஆசிரியர், வக்கீல் என்று தாமே குழந்தை என்னவாக வேண்டும் என்பதை தீர்மானிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

இன்னும் சிலர், ‘நான் டாக்டராக ஆசைப்பட்டு முடியாமல் போய்விட்டது. எனவே என் மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கியே தீருவேன்’ என்று சபதம் ஏற்கிறார்கள். உண்மையிலேயே அந்த குழந்தைக்குள் ஒரு நல்லாசிரியர் உறங்கிக்கொண்டு இருக்கலாம். அதற்கு முரணாக நீங்கள் அவர்களை டாக்டராக்க நினைப்பது தவறு. அதாவது, பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்பதை பெற்றோர் தீர்மானம் செய்வது சரியான போக்கு அல்ல. இது மேம்பட்ட சமூகம் மலர்வதற்கு தடையாகிப்போகும்.

குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பானதாக்க விரும்பி தங்களின் ஆசையை திணிக்கும் பெற்றோருக்கு அதிக ஆர்வம் இருக்கிறதே தவிர தங்களின் விருப்பத்தை குழந்தைகள் உள்வாங்குகிறார்களா? அதில் அவர்களுக்கும் விருப்பம் இருக்கிறதா? என்பதையெல்லாம் சிந்திக்கும் எண்ணம் இல்லை. குழந்தை என்னவாகப் போகிறது என்பதை அந்த குழந்தையையே தீர்மானிக்க விட வேண்டும்.

கண்டிப்பு கலந்த வளர்ப்பு முறை இன்றைய குழந்தைக்கு அவசியம்தான். ஆனால் எந்த அளவுக்கு குழந்தைக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்பதையும் அளவிட வேண்டும். ஒரு குழந்தை வெற்றிப்பாதையில் பயணிக்க அகச்சுதந்திரம் அவசியம் என்பதை பெற்றோர் மறந்துவிடக்கூடாது.

பிள்ளைக்கு வரலாற்றுப் பாடம் பிடிக்கிறது. கணக்குப் பாடத்தில் ஆர்வம் இல்லை என்றால், பெற்றோர் அந்த பிள்ளையை தொழில்நுட்ப நிபுணராக ஆக்க விரும்புவது அர்த்தமற்றது. இன்னும் சில பெற்றோர், தங்கள் பணிபுரியும் துறையிலேயே குழந்தையை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அந்த பாதையில் குழந்தையை பயணிக்கவைப்பதும் அதிகமாகி வருகிறது. இதுவும் மடமையே.

குழந்தைகள் மீது பெற்றோர் திணிக்கும் இத்தகைய கட்டாயக்கல்வி முறை எந்த வகையிலும் குழந்தைகளை சிந்தனையாளர்களாகவோ அல்லது சாதனையாளர்களாகவோ ஆக்காது என்பது வரலாறு உணர்த்தும் பாடம்.

நம் முகக்கண்ணாடியை தன் பிள்ளைகள் முகத்தில் மாட்டி விட்டால் பார்வை சரியாகிவிடுமா? அது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி கண் பார்வையை சின்னாபின்னமாக்காதா? இதை சிந்திக்க வேண்டாமா?

அறிஞர்களில் ஜிப்ரான் சொல்வது போல, ‘நீ குழந்தைகளைப் போலவே இருக்க பாடுபடு. ஆனால் உன்னைப் போல அவர் களை ஆக்க முயலாதே’ என்பார்.

பள்ளிப் பருவ மாணவனிடத்தில் இலக்கை நிர்ணயிக்கும் திறனோ, அதனைப்பற்றிய திட்டமிடலுக்கான பயிற்சியோ இல்லாதபோது, எப்படி முழு சுதந்திரத்தையும் கொடுப்பது? என பெற்றோர் நினைக்கலாம். அப்படி இருக்கும் சூழலில் பெற்றோர்கள் ஒரு சில வழிமுறைகளைக் கையாளலாம். தங்கள் பிள்ளைகள் எதைக்கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்களோ அதையும் அதனால் அவனுக்கு ஏற்படும் எதிர்கால நன்மை, தீமைகளையும் விளக்கிக் கூறலாம்.

படிக்க முடியவில்லையே என்று கவலையோடு தன் வாழ்க்கையில் போராடியவர் மலாலா. ஆனால் அவளது தந்தை எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லித்தேற்றினார். ‘உன் சுதந்திரத்தை நான் பாதுகாப்பேன். உன் கனவை நிறைவேற்ற முயற்சி செய்’ என்றார் மலாலாவின் தந்தை. இலக்கை திட்டமிட்டு தன் லட்சியப்பாதையை வகுத்தாள்.

கல்வி என்பது எனக்கு மட்டுமல்ல பெண்ணினத்துக்கே அவசியம் என்று தன் வாழ்வால் உலகறியச் செய்தாள். சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்குத்தான் அடிமையின் வாழ்க்கை பிடித்துப்போகும் அல்லது பழகிப்போகும் என்று கோஷமிட்டாள். அவளது வீரதீரச் செயல்பாட்டுச் சாதனைக்கும் எழுச்சிமிகு சிந்தனைக்கும் 17-வது வயதிலே அவளுக்கு கிடைத்த பரிசுதான் அமைதிக்கான நோபல் பரிசு. இதில் நாம் பார்க்க வேண்டியது அவளது சுதந்திரம் காக்கப்பட்டது. அவள் ஒரு சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றாள்.

காந்தியடிகளின் கூற்றுப்படி, வாழ்க்கையின் மிகப்பெரிய பாடங்களை அறியாமை நிறைந்தவர்கள் என்று கருதப் பெறும் சிறு குழந்தைகளிடமே கற்றுக் கொள்ள முடியும்.

இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அன்பு, பாசம், நேர்மை, உண்மை என்று நல்லதைச் சொல்வது அவசியம்தான். ஆனால் அதோடு குழந்தைகளின் உருவாக்கப்பயிற்சியில் லட்சியத்தை நிர்ணயித்தல், அவற்றுக்காக திட்டமிடல், திட்டமிட்டதை செயல்படுத்துதல் என்பதில் அவர்களின் சுயசுதந்திரம் பறிக்கப்படாமல் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

முக்காலமும் புகழும் பெருந்தலைவரான கர்மவீரர் காமராஜர் தன் சுதந்திரப் பார்வையில் வளர்ந்ததால்தான் முதல்-அமைச்சராக உயர்ந்தார். அகச்சுதந்திரத்தில் வாழ்பவனுக்கு ஏற்றமிக்க எண்ணம்தான் எல்லாமுமாக இருக்கிறது. அவன் எண்ணத்தில் தெளிவுடன் இருப்பதால் அவன் என்னவாக மாற வேண்டும் என்பதில் தெளிவுடன் இருப்பான். சுதந்திரக்காற்றை சுவாசிப்பவனுக்கு அவனது எண்ணம் உயர ஏற உதவும் ஏணியாகும்.

இன்றைக்கு இருக்கும் சமூக கலாசார நிகழ்வுகள் நம்மை அச்சப்படுத்தினாலும், குழந்தைகள் சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிப்பதும் காலத்தின் தேவை தான். ஆனால், அதை உங்களின் கண்காணிப்பில் மேற்கொள்ளுங்கள். அவர்களின் லட்சியத்தை கேட்டறிந்து, அதை அடைய துணை நில்லுங்கள். குழந்தைகள் நிச்சயம் லட்சியப் பாதையை அடைந்து ஜொலிப்பார்கள்.

- பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர்

Next Story