மின்னல் தாக்கி பெண் சத்துணவு ஊழியர் சாவு


மின்னல் தாக்கி பெண் சத்துணவு ஊழியர் சாவு
x
தினத்தந்தி 12 Sept 2018 3:15 AM IST (Updated: 12 Sept 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டு இருந்த பெண் சத்துணவு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி,


புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பசுவபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி பிரியா (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரியா பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையம் அரசு பள்ளிக்கூடத்தில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை பிரியா பசுவபாளையத்தில் உள்ள தன்னுடைய தாய் கண்ணம்மாள் வீட்டுக்கு சென்றார். பின்னர் அந்தப்பகுதியில் உள்ள தோட்டத்துக்கு மல்லிகைப்பூ பறிக்க சென்று உள்ளார். அப்போது புஞ்சைபுளியம்பட்டி மற்றும் பவானிசாகர் பகுதியில் மழை பெய்யத்தொடங்கியது.

தோட்டத்தில் பூக்கள் பறித்துக்கொண்டு இருந்த பிரியாவை திடீரென மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். நீண்ட நேரமாகி வீட்டுக்கு பிரியா வராததால் சந்தேகம் அடைந்த அவரின் உறவினர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு உடல் கருகிய நிலையில் பிரியா பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பிரியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபற்றி பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story