சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை போராட்டம் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்


சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை போராட்டம் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 12 Sept 2018 4:15 AM IST (Updated: 12 Sept 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 17-ந் தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று தி.மு.க. தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில்,

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் திறந்து இருந்த கடைகளை மூடச் சொன்னது தொடர்பாக தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அவதூறாக பேசியதாக கூறி சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சுரேஷ்ராஜன் தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ் (காங்கிரஸ்), ஆஸ்டின் (தி.மு.க.), தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், நகர செயலாளர் வக்கீல் மகேஷ், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, இந்திய கம்யூனிஸ்டு ஸ்ரீகுமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தின் போது சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சியினரை தகாத வார்த்தைகளால் பேசிய சப்-இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் 17-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் அனைத்துக்கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பெர்னார்டு, சேக்தாவூது, பசலியான், முத்துசாமி, அர்ஜூனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் முருகேசன், அந்தோணி, ம.தி.மு.க. மகராஜபிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்தனர்.

Next Story