மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் + "||" + Public stir in protest to open Tasmalk shops

டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
கம்பம் குடியிருப்பு பகுதியில், டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கம்பம்,


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டன. அதன்படி தேனி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. அதற்கு பதிலாக குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கம்பத்தில் மாரியம்மன்கோவில் தெரு, ஐசக் போதகர் தெரு, புதிய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், கம்பம் புதிய பஸ்நிலையம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கம்பம் புதிய பஸ்நிலையத்தில் குடிமகன்களின் தொல்லை அதிகமாக உள்ளது. கொலை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடந்து வருகின்றன. குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே மாரியம்மன் கோவில் தெரு, ஐசக் போதகர் தெரு, புதிய பஸ்நிலையம் பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை