கருகும் பயிர்களை காப்பாற்றிட முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


கருகும் பயிர்களை காப்பாற்றிட முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Sept 2018 3:08 AM IST (Updated: 12 Sept 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே கருகும் பயிர்களை காப்பாற்றிட முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆறுகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தண்ணீர் பாசனம் கிடைக் காமல் சம்பா இளம் பயிர்கள் கருகி வருகின்றது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பா இளம் பயிர்களை காப்பாற்றிட ஆறுகளில் போதிய தண்ணீர் முறை வைக்காமல் திறக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே உள்ள மாவூர், திருக்காரவாசல், பாலையூர், குன்னியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கருகும் சம்பா பயிர்களை காப்பாற்றிட முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் அருகே உள்ள மாவூர் கடைவீதியில் தி.மு.க., உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேவா தலைமை தாங்கினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை பாராளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவப்பிரகாசம், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பையன், தி.மு.க. நிர்வாகிகள் கருணாகரன், செல்வராஜ், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது கருகும் பயிரை காப்பாற்றிட வெள்ளையாறு மற்றும் பாண்டவையாறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அதுசமயம் விவசாயி ஒருவர் இறந்தது போன்று சாலையில் படுக்க வைத்து பெண்கள் சுற்றி வந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Next Story