எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தல்


எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Sep 2018 11:15 PM GMT (Updated: 11 Sep 2018 10:45 PM GMT)

புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுச்சேரி,

சம்பள உயர்வு, உதவியாளர், டிரைவர் நியமிக்க வேண்டும் என்று புதுவை எம்.எல்.ஏ.க்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தனியாக கூட்டம் நடத்தி முடிவு எடுக்கலாம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் புதுவை எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனை கூட்டம் சட்டமன்ற கட்டிடத்தின் 4-வது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜே.ஜெயபால், அசோக் ஆனந்து, டி.பி.ஆர்.செல்வம், சுகுமாரன், கோபிகா, சந்திர பிரியங்கா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்தைப்போல் புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மேலும் எம்.எல்.ஏ.க்களுக்கு டிரைவர், உதவியாளர் தரவேண்டும், கடந்த காலத்தில் வழங்கியதுபோல் மனைப்பட்டா வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக குளிர்கால சட்ட மன்ற கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார். புதுவை மாநில எம்.எல்.ஏ.க்களுக்கு தற்போது பல்வேறு படிகளுடன் சேர்த்து ரூ.48 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story