தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம்
தொழில் நல்லுறவு விருதுபெற வேலையளிப்பவர்களும், தொழிற்சங்கங்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், அடுத்த மாதம் 10-ந் தேதி இதற்கான கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஞானசம்பந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியையும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு “தொழில் நல்லுறவு பரிசு“ திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும் வேலையளிப்பவர்கள், தொழிற்சங்கங்களுக்கு 2017-ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.
இந்த விருதுக்குரிய விண்ணப்பங்களைத் தொழிலாளர் துறையின் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது இந்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம், தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story