வேளாண் எந்திரம், கருவியை விவசாயிகள் மானிய விலையில் பெறலாம் கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
வேளாண் எந்திரம், கருவியை விவசாயிகள் மானிய விலையில் பெறலாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
கடலூர் கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையம் மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்கள் கடலூர் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 87 லட்சத்து 56 ஆயிரம் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் 8 குதிரைத்திறன் முதல் 70 குதிரைத்திறன் சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர்டில்லர், நெல்நடவு எந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் எந்திரம், சுழல்கலப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்புஅமைக்கும் கருவி, நிலத்தை சமன் செய்யும் கருவி, தட்டை வெட்டும் கருவி, விசைத்தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான், துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் முதலான வேளாண் எந்திரங்களையும், கருவிகளையும் விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கி பயன்பெறலாம்.
உழவன் செயலியில்...
சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 முதல் 40 சதவீதம் வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது. உயர்தொழில்நுட்ப அதிக விலையுள்ள எந்திரங்களை வாங்கிட அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற்றிட முதலாவதாக விவசாயிகள் உழவன் செயலியில் தனது ஆதார் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் agrimachinery.nic.in என்ற இணைதளத்தில் இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளையும், ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வுசெய்யலாம்.
10 நாட்களுக்குள்
விவசாயி மற்றும் விற்பனை செய்த முகவரால் இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்கள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களால் சரிபார்க்கப்படும். குறிப்பிட்ட ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.
அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்றிட, வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் மானிய உதவியுடன் அமைக்கப்படுகிறது. விவசாயிகள், விவசாயக்குழுக்கள் அல்லது தொழில்முனைவோர் ஆகியோர் பயனாளிகள் ஆவர். இவ்வாறான ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
வாடகை மையங்கள்
பண்ணை சக்தி குறைவாக அமைந்துள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் குறைந்தபட்சம் 8 உறுப்பினர்கள் கொண்ட விவசாய குழுக்கள் மொத்தம் ரூ.10 லட்சத்துக்கு குறையாத மதிப்புடைய பண்ணை எந்திரங்களை வாங்கி வாடகை மையங்களை நடத்தலாம். இதற்கு 80 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. நீடித்த நிலையான மானாவாரி இயக்க திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள குழுக்களும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் எந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 102 டிராக்டர்கள், 107 பவர் டில்லர்கள், 9 நாற்று நடும் கருவிகள் மற்றும் 401 இதர வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி கொள்ள நடப்பாண்டில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 56 ஆயிரமும், 26 வாடகை மையங்கள் அமைக்க ரூ.2 கோடியே 30 லட்சமும் இம் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானிய விலையில் கருவிகள் மற்றும் எந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கொண்டு விவரங்கள் அறிய உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம் அல்லது மத்திய அரசின் www.agrimachinery.nic.in என்ற இணைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story