2019-ம் ஆண்டு தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கியது


2019-ம் ஆண்டு தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கியது
x
தினத்தந்தி 12 Sep 2018 10:30 PM GMT (Updated: 12 Sep 2018 8:23 PM GMT)

2019-ம் ஆண்டு தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

மும்பை, 

2019-ம் ஆண்டு தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

வெற்றிகரமான கூட்டணி

மராட்டியத்தில் 1999-ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சியை கைவசம் வைத்திருந்த, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டனி கட்சிகள் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தன.

இந்தநிலையில் மராட்டியத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் இருகட்சிகளும் மீண்டும் கூட்டனி அமைத்து செயல்பட போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டன.

தற்போதே வேகவேகமாக தேர்தலுக்கு தயாராகி வரும் இரு கட்சிகளும் மெகா கூட்டணியை உருவாக்கி ஆளும் பா.ஜனதா- சிவசேனாவை தூக்கியெறிய திட்டமிட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இருகட்சியின் முக்கிய தலைவர்களும் மும்பையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒருமனதாக முடிவு

இது ஒரு நல்ல தொடக்கமாகும். இரு கட்சிகளும் மதசார்பற்ற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்.

எங்கள் முக்கிய போட்டி பா.ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் எதிரானது. எனவே நாங்கள் மதசார்பற்ற ஓட்டுகள் சிதறுவதை தவிர்க்க விரும்புகிறோம்.

எனவே நாங்கள் ஒத்தகருத்துடைய கட்சிகளின் பொறுப்பாளர்களை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவார்.

ஓட்டுகள் சிதறுவதை தவிர்ப்போம்...

நாங்கள் மேலும் 2 அல்லது 3 நாட்கள் சந்தித்து பேச உள்ளோம். இந்த வாரத்திற்குள் ஒத்தகருத்துடைய கட்சிகளின் நிலைபாடு என்ன என்பது தெளிவாகிவிடும்.

வரவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே நாங்கள் வரும் தேர்தல்களில் ஒன்றாக செயல்பட்டு ஓட்டுகள் சிதறுவதை தடுப்பதில் முனைப்புடன் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல், மும்பை தலைவர் சஞ்சய் நிருபம், முன்னாள் மத்திய மந்திரி சுசில்குமார் ஷிண்டே, முன்னாள் மந்திரி ஆசிப் நசீம் கான், மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ெஜயந்த் பாட்டீல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story