கோவையில் 18-ந் தேதி நடைபெறும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் மாநகர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்


கோவையில் 18-ந் தேதி நடைபெறும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் மாநகர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 14 Sept 2018 3:30 AM IST (Updated: 13 Sept 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வருகிற 18-ந் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மாநகர தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழக அரசில் ஊழலில் தொடர்புடையவர்களை பதவி விலக வற்புறுத்தியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு வருகிற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

குடிநீர் வினியோக முறை

அண்ணா, பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தி.மு.க. உதயமான நாள் என முப்பெரும்விழா விழுப்புரத்தில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதில் கோவை மாநகர தி.மு.க.வினர் அதிக அளவில் கலந்து கொள்வது. கோவைக்கு குடிநீர் வழங்கும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்த பின்னரும் கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே சீரான குடிநீர் வினியோக முறையை அளிக்க கோவை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் மேம்படுத்துதல் திட்டம் என்ற பெயரில் குளக்கரைகளை வலுப்படுத்தும் போது குளங்களின் பரப்பளவை குறைக்கக் கூடாது. அப்படி குளங்களின் பரப்பளவை குறைத்து நீதிமன்றங்களின் உத்தரவுக்கு எதிராக கோவை மாநகராட்சி செயல்பட்டால் கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மெட்டல்மணி, நாச்சிமுத்து, நந்தகுமார், குமரேசன், பகுதி செயலாளர் எஸ்.எம்.சாமி, வக்கீல்கள் பி.ஆர்.அருள்மொழி, கணேஷ்குமார், கோட்டை அப்பாஸ், ஆர்.எஸ்.புரம் பூபாலன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story