உக்கடம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் மகா மண்டபம் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்


உக்கடம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் மகா மண்டபம் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Sept 2018 4:15 AM IST (Updated: 13 Sept 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

கோவை உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் ரூ.40 லட்சம் செலவில் மகாமண்டபம் கட்டும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கி வைத்தார்.

கோவை,

கோவை உக்கடத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் அருகே லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. தமிழக இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த கோவிலில் 7 நிலை கொண்ட ராஜகோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. அத்துடன் கோவிலில் திருப்பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே அங்கு ரூ.40 லட்சம் செலவில் மகா மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வந்தன.

பணிகள் தொடக்கம்

இந்த நிலையில் மகாமண்டபம் கட்டுவதற்காக நிலவுகால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். இதில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு நிலவுகால் நட்டு பணியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அங்கு மகாமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த மண்டபம் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் மிக விரைவில் முடிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதுபோன்று 7 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி முடிவடைந்து விட்டதால் அதற்கு வர்ணம் பூசும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., சமூக சேவகர் அன்பரசன், ஸ்தபதி கணேசன், கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) கைலாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story