ஒரே நாளில் 9 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்


ஒரே நாளில் 9 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Sep 2018 10:45 PM GMT (Updated: 12 Sep 2018 10:45 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 9 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

ராமநாதபுரம்,


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினமான நேற்று ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இவற்றில் பல இடங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததன் பேரில் சமூக நலத்துறை, சைல்டுலைன், மனித வர்த்தக கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் அந்தந்த பகுதிகளுக்கு விரைந்து சென்று குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தினர். இவ்வாறு திருவாடானை அருகே உள்ள என்.மங்கலத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கலையரசன் (27) என்ற வாலிபருக்கும் நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதேபோல சாயல்குடி காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், நயினாமரைக்கான் பகுதியை சேர்ந்த ராஜா(31) என்பவருக்கும் நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ராமநாதபுரம் அரண்மனை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த கார்த்திக்(29) என்பவருக்கும் நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. வாலிபர் கார்த்திக் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண ஏற்பாட்டின்போது அதிகாரிகள் சிறுமியை மீட்டு சமூக நல அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமியின் தாத்தா மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை தாத்தா தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல பாண்டியூரை சேர்ந்த 17வயது சிறுமிக்கும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கனகராஜ்(27) என்ற வாலிபருக்கும் பரமக்குடி கோவிலில் வைத்து நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. சிவகங்கை நன்னியூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், பாப்பங்கோட்டை பகுதியை சேர்ந்த பாலமுருகன்(28) என்பவருக்கும் திருவாடானை காளியம்மன் கோவிலில் வைத்து நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

தங்கச்சிமடம் மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரெக்சின் (26) என்பவருக்கும் நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. கமுதி மூலகரைபட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், விருதுநகர் அம்மன்பட்டியை சேர்ந்த ஜோதிராமலிங்கம்(35) என்பவருக்கும் நடக்க இருந்த திருமணமும், மேலகிடாரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், மேலச்செல்வனூர் சாத்தன்குடியை சேர்ந்த திருமுருகன்(33) என்ற வாலிபருக்கும் நடைபெற இருந்த திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதுதவிர தரைக்குடியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், கோவில்பட்டியை சேர்ந்த சிவசாமி(40) என்பவருக்கும் நடக்க இருந்த திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த திருமணங்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் இருதரப்பு பெற்றோர்களிடமும் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கமாட்டோம் என்று உறுதிமொழி எழுதி வாங்கி கொண்டனர். இவர்களில் ஒரு சிலர் யாருக்கும் தெரியாமல் மீண்டும் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மீது கோர்ட்டில் தடைஉத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story