அரசு பஸ் மோதி தொழிலாளி பலி


அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 14 Sept 2018 3:15 AM IST (Updated: 14 Sept 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார். அவரது உடலை பிணவறைக்கு கொண்டு சென்ற போது ஏற்பட்ட தகராறில் ஆஸ்பத்திரி ஊழியர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

ராமநாதபுரம், 


ராமநாதபுரம் அருகே உள்ள வன்னிவயலை சேர்ந்தவர் தினப்போக்கன் மகன் வினோத் (வயது 28). கூலித்தொழிலாளியான இவர் லலிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் வினோத் நேற்று முன்தினம் இரவு விநாயகர் சதுர்த்திக்கு பூஜை பொருட்கள் வாங்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இடையர்வலசை அருகே வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் இருசக்கர வாகனத்தில் மோதியது. அதில் தலையில் பலத்த காயமடைந்த வினோத் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் தொருவளூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரை தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த வினோத்தின் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு, பிணவறை ஊழியர் சோனைமுத்து கொண்டு சென்றார். அப்போது அவருக்கும், வன்னிவயல் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கிராமத்தினர் ஊழியரை தாக்கியதோடு, அங்கிருந்த அறையின் கதவை சேதப்படுத்தினார்களாம். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சோனைமுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதை கண்டித்து பிணவறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் ஊழியர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்களை சமாதானப்படுத்தினர். இதுதொடர்பாக பிணவறை ஊழியர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். 

Next Story