காஞ்சீபுரத்தில் வக்கீலை வெட்டிய வழக்கில் 5 பேர் கைது


காஞ்சீபுரத்தில் வக்கீலை வெட்டிய வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2018 3:00 AM IST (Updated: 14 Sept 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் வக்கீலை சரமாரியாக கத்தியால் வெட்டிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தில் வக்கீலை சரமாரியாக கத்தியால் வெட்டிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

கத்தி வெட்டு

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் மண்டபம் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 26). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சிவக்குமார் வீட்டில் இருந்தபோது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் இவரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ரகசிய தகவல்

இதுகுறித்து காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் பெரிய காஞ்சீபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியத்திற்கு உத்தரவிட்டார்.

அவரது மேற்பார்வையில் தனிப்படை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் துளசி, முரளி, சிவக்குமார் மற்றும் போலீசார் வக்கீலை வெட்டிய குற்றவாளிகளை பல்வேறு இடங்களுக்கு சென்று வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் பெரிய காஞ்சீபுரம் பகுதியில் ரவுடிகள் ஒரு இடத்தில் கும்பலாக இருப்பதாக தகவல் வந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

5 பேர் கைது

அப்போது அங்கிருந்த காஞ்சீபுரம் தாமல் பகுதியை சேர்ந்த மணிமாறன் (28), முனியாண்டி (25), துளசிராமன் (24), புளியரம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (25), தூசி மாமண்டூரை சேர்ந்த இஸ்மாயில் (27) ஆகியோரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் வக்கீல் சிவக்குமாரை கத்தியால் வெட்டியது தெரியவந்தது. இதையொட்டி இவர்களை பெரிய காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வலைவீச்சு

கைது செய்யப்பட்ட 5 பேரும் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் விசாரணையில் காஞ்சீபுரத்தில் தினேஷ், தணிகா ஆகியோர் தனித்தனியாக ரவுடிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வக்கீல் சிவக்குமாருக்கு மூளையாக ரவுடி தணிகா இருந்துள்ளார்.

இதனால் முன்விரோதம் காரணமாக மற்றொரு ரவுடியான தினேஷ் கோஷ்டி வக்கீல் சிவக்குமாரை தீர்த்துக்கட்ட இந்த சதிதிட்டம் தீட்டியுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story