இறால் பண்ணை உரிமையாளரின் மனைவியிடம் மோசடி
எம்.எல்.ஏ. என்று கூறி இறால் பண்ணை உரிமையாளரின் மனைவியிடம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சீர்காழி,
சீர்காழி தென்பாதி வி.என்.எஸ். நகரை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 60). இவர், இறால் பண்ணை நடத்தி வருகிறார். மேலும் புதிய பஸ் நிலையம் எதிரே இறால் தீவனக்கடையும் வைத்துள்ளார். நேற்று முன்தினம் தொழில் சம்பந்தமாக நாராயணசாமி திண்டுக்கல்லுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாராயணசாமி வீட்டிற்கு 2 மர்ம நபர்கள் ஆட்டோவில் சென்றனர். அங்கு இருந்த நாராயணசாமி மனைவி ஜெகதீஸ்வரியிடம் அந்த மர்ம நபர்களில் ஒருவர் தான் எம்.எல்.ஏ. என்று கூறி அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அந்த மர்ம நபர், நாராயணசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு நான் தான் எம்.எல்.ஏ. பேசுகிறேன், விநாயகர் சதுர்த்தியையொட்டி 2 ஆயிரத்து 500 பேருக்கு அன்னதானமும், 17 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்போவதாகவும் கூறி, அதற்கு உங்கள் சார்பில் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து நாராயணசாமி தனது மனைவி ஜெகதீஸ்வரியிடம் ரூ.5 ஆயிரத்தை செல்போனில் பேசியவரிடம் கொடுக்கும்படி கூறினார். இதனையடுத்து ரூ.5 ஆயிரத்தை பெற்று கொண்ட அந்த மர்ம நபர்கள், மேலும் 1,000 ரூபாயை ஜெகதீஸ்வரியிடம் வாங்கி கொண்டு சென்று விட்டனர். இதையடுத்து சந்தேகம் அடைந்த ஜெகதீஸ்வரி தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது வந்த மர்ம நபர்களில் யாரும் எம்.எல்.ஏ. இல்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெகதீஸ்வரி, சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன்போரில் போலீசார், நாராயணசாமியிடம் மர்ம நபர்கள் பேசிய உரையாடல் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story