ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்


ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Sept 2018 4:46 AM IST (Updated: 14 Sept 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் வாகன உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

டீசல் உயர்வால் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் வாகனங்களின் (ரிக்) உரிமையாளர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தொழில் ஏற்பட்டுள்ள பெருத்த நஷ்டம் காரணமாக தொழிலாளர் களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. உதிரி பாகங்களின் விலையும், இரும்பு தளவாட கருவிகளான பிட், ராடு, ஹேமர் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துவிட்டது. இதனால் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும்போது 1 அடிக்கு ரூ.75 என பொதுவான கட்டணத்தை நிர்ணயம் செய்து அந்த கட்டணத்தை அனைத்து ரிக் வாகன உரிமையாளர்களும் வசூலிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் வாகனங்களின் (ரிக்) உரிமையாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்தடுத்த நாட்கள் என தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த ரிக் வாகனங்களின் உரிமையாளர்கள் கரூர்- சேலம் மெயின் ரோடு காதப்பாறை பிரிவு சாலையோரம் வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் வாகனங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். எனவே தற்போது வேலை நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் இந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரிக் வாகனங்களின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story