சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை


சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 13 Sep 2018 9:45 PM GMT (Updated: 13 Sep 2018 11:49 PM GMT)

சதுர்த்தி விழாவையொட்டி கடலூரில் உள்ள விநாயகர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கடலூர், 


கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கடலூர் புதுப்பாளையம் இரட்டைப்பிள்ளையார் கோவிலில் நேற்று காலையில் விநாயகருக்கு பால், தேன் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் திருப்பாதிரிப்புலியூர் சன்னதிதெருவில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில், மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோவில், செல்லங்குப்பம் வெள்ளிப்பிள்ளையார்கோவில், புதுக்குப்பம் சித்திவிநாயகர் கோவில், கூத்தப்பாக்கம் மணக்குள விநாயகர் கோவில், திருப்பாதிரிப்புலியூர் சக்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் 6-ம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. 10-ம் நாளான நேற்று சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பிரமாண்ட லட்டுகள் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் நகர்மன்ற தலைவர் பன்னீர்செல்வம், அருணாசலம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story