பொதுமக்கள் கூடும் இடங்களில் பாலியல் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


பொதுமக்கள் கூடும் இடங்களில் பாலியல் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 14 Sep 2018 12:13 AM GMT (Updated: 14 Sep 2018 12:13 AM GMT)

பொதுமக்கள் கூடும் இடங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சட்டம் சார்ந்த மருத்துவத்துறை கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி அரசு மருத்துக்கல்லூரியில் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை சார்பில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் இளவரசன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் இளங்கோவன், சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ், டாக்டர்கள் முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள்.கருத்தரங்கில் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை துணை பேராசிரியர் மதன்ராஜ் பேசியதாவது:- குழந்தைகள், பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து உள்ளன. இதுதொடர்பாக வெளிப்படையாக பேச முடியாத நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். பாலியல் சார்ந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர சட்டத்தில் இடம் உள்ளது.

இந்த சட்டங்கள் குறித்து பொதுமக்கள் உரிய விழிப்புணர்வை பெற வேண்டும். பெண்கள் இந்த சட்டத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பஸ்நிலையங்கள், அலுவலகங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் இதுதொடர்பாக உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கருத்தரங்கில் அரசு டாக்டர்கள், மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story