காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை கடத்த முயன்ற 3 பேர் கைது


காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை கடத்த முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2018 5:47 AM IST (Updated: 14 Sept 2018 5:47 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்து கோர்ட்டில் சரண் அடைந்த கல்லூரி மாணவியை கடத்த முயன்றதாக பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மூங்கிலேரி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மனைவி வனிதா. இவர்கள் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் ஹேமலதா (வயது 19). இவர் மூங்கிலேரி கிராமத்தில் வீட்டில் தனியாக தங்கி இருந்து ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

அப்போது கல்லாவி மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த சிங்காரவேலுவுக்கும், ஹேமலதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையறிந்த மாணவியின் பெற்றோர், மகளை திருப்பூருக்கு அழைத்து சென்று விட்டனர். கடந்த மாதம் 23-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த மாணவி ஹேமலதா திடீரென மாயமானார். இதுகுறித்து அவருடைய பெற்றோர் திருப்பூர் போலீசில் புகார் செய்தனர்.

இந்தநிலையில் காதல்ஜோடி ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு நேற்று முன்தினம் கோர்ட்டில் சரண் அடைந்தது. இதையறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கோர்ட்டுக்கு வந்தனர். அவர்கள் கோர்ட்டு வளாகத்தில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காதல் ஜோடியிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் மாணவியை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஹேமலதா ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து தண்டபாணி, வனிதா, உறவினர் கோவிந்தராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.

Next Story