ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை


ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
x
தினத்தந்தி 14 Sep 2018 12:51 AM GMT (Updated: 14 Sep 2018 12:51 AM GMT)

இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் 1,008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஈரோடு,

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக விநாயகர் சிலைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் கண் திறக்கப்பட்டு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

ஈரோடு மாநகர் பகுதியில் 220 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

ஈரோடு சம்பத்நகரில் 11 அடி உயரத்தில் விஸ்வரூப சிவசக்தி விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் கணபதி பூஜை நடந்தது. அதன்பின்னர் விநாயகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் சிறுவர்-சிறுமிகளுக்கான ஓவியப்போட்டி, வினாடி-வினா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் கொல்லம்பாளையம், சூரம்பட்டிவலசு, பெரியவலசு, நாராயணவலசு, ரங்கம்பாளையம், நாச்சியப்பாவீதி, தில்லைநகர், கருங்கல்பாளையம், திருநகர்காலனி உள்பட பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 9 அடி வரை உயரமுடைய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

இதில் சிவலிங்கம் மற்றும் முருகன் வைத்திருக்கும் விநாயகர், சிம்ம வாகன விநாயகர், மான், மயில், குதிரை வாகன விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் கோமாதா பூஜை நடக்கிறது.

நாளை (சனிக்கிழமை) மாலை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்படுகிறது. சம்பத்நகரில் தொடங்கும் இந்த ஊர்வலம் பெரியவலசு, முனிசிபல்காலனி, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, பிரப்ரோடு, காமராஜர் வீதி, ஈஸ்வரன்கோவில் வீதி, காவிரிரோடு வழியாக காவிரி ஆற்றுக்கு செல்கிறது.

Next Story