திருவலம் அருகே 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 உலோக சிலைகள் கண்டெடுப்பு
திருவலம் அருகே 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 உலோக சிலைகள் கண்டெடுப்பு
சிப்காட் (ராணிப்பேட்டை),
திருவலம் அருகே ஆதிலட்சுமி நாராயண பெருமாள் கோவில் புனரமைக்கும்போது புதைந்து கிடந்த 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
திருவலம் அருகே மேல்பாடி சோமநாதீஸ்வரர் கோவில் மிகப்பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த கோவில் ராஜராஜ சோழன் மற்றும் அவரது வழி வந்தவர்களால் கட்டி பராமரிக்கப்பட்டு வந்ததாகும். ராஜராஜ சோழனின் தாத்தா நினைவாக இந்த கோவிலுக்கு அருகிலேயே நினைவு கோவிலும் கட்டப்பட்டு வரலாற்றை இன்றளவும் நினைவுப்படுத்தி வருகிறது.
இப்படி வரலாற்றில் புகழ் வாய்ந்த மேல்பாடியில், போலீஸ் நிலையம் அருகில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிலட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலமடைந்து காணப்பட்டதால் இந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஆதிலட்சுமி நாராயண பெருமாள் அறக்கட்டளை ஒன்றை நிறுவினர். அதன் நிறுவன தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இந்துமதி பாண்டு தலைமையில் அறக்கட்டளை நிர்வாகிகளும், பொதுமக்களும் நேற்று முன்தினம் பூமி பூஜை செய்து புனரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது கோவில் படிக்கட்டு பகுதிகளை புனரமைக்கும்போது அங்கு 2 உலோக சிலைகள் புதையுண்டு கிடப்பது தெரிய வந்தது. உடனே அந்த சிலைகளை எடுத்து பார்த்தபோது சுமார் 1½ அடி உயரத்தில் பெருமாள் சிலை ஒன்றும், சுமார் 1 அடி உயரத்தில் கருடாழ்வார் போல் தோற்றமுடைய சிலை ஒன்றும் கிடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த சிலைகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் அறக்கட்டளையினர் அந்த சிலைகளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பின்னர் இதுகுறித்து மேல்பாடி கிராம நிர்வாக அலுவலர் பிரியதர்ஷினி, மேல்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் லதா, ராஜேந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காட்பாடி மண்டல தாசில்தார் கணேசனிடம் அந்த 2 சிலைகளும் ஒப்படைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மண்டல தாசில்தார் கணேசன் அந்த சிலைகளை பாதுகாப்பு கருதி மேல்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மேல்பாடியில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், கண்டெடுக்கப்பட்ட 2 சிலைகளையும் அதனுடைய பழமை மற்றும் வரலாற்றினை ஆராய்ச்சி செய்துவிட்டு திரும்பவும் இந்த கோவில் வசமே ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story