குமரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி


குமரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 15 Sept 2018 4:00 AM IST (Updated: 15 Sept 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் தக்கலை குமாரகோவில் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவருக்கும், அருமநல்லூர் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன் வாலிபர் அருமநல்லூரில் உள்ள தனது வீட்டுக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதில் இளம்பெண் கர்ப்பமானார். அதன் பிறகு வாலிபர் இளம்பெண்ணை சந்திப்பதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

எனவே இளம்பெண், அந்த வாலிபரை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் இளம்பெண் வந்தார். தொடர்ந்து அவர் தன்னை ஏமாற்றிய வாலிபர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை இளம்பெண் தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே ஓடிச்சென்று அந்த இளம்பெண்ணிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்ததோடு, அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து ஆஸ்பத்திரிக்கு வரவழைத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், போலீசாரிடம் விவரங்களை கேட்டறிந்தார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது தீக்குளிக்க முயன்ற இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், இதே வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவதாக கூறியிருந்தார் என்றும், அப்போது சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து போலீசார் எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பி வைத்ததாகவும், ஆனால் தற்போது அந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Next Story